நீதியை விரைவாக வழங்க நீதிமன்றங்களில் ஒத்திவைப்பு கலாசாரத்தை மாற்ற வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட நீதித்துறையின் இரண்டு நாள் தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


"நீதிமன்ற அமைப்பால் மக்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது"


நீதித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து விரிவாக பேசிய குடியரசு தலைவர், "நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நம் அனைவருக்கும் பெரும் சவாலாக உள்ளது. நாட்டின் அனைத்து நீதிபதிகளுக்கும் நீதியைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.


நீதிமன்ற அமைப்பில் சாதாரண மக்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பெண் நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். இந்த நிகழ்ச்சியில், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் கொடி மற்றும் சின்னத்தையும் குடியரசு தலைவர் வெளியிட்டார். 


சமீபத்தில், கொல்கத்தா சம்பவம் குறித்து பேசியிருந்த குடியரசு தலைவர், "இந்த கொடூரமான செயல்களின் மூல காரணங்களை சரி செய்ய நம் சமூகத்தில் நேர்மையான, பாரபட்சமற்ற சுயபரிசோதனை நடக்க வேண்டும்" என்றார்.


கொல்கத்தா சம்பவம் குறித்து பேசிய குடியரசு தலைவர்: 


பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய குடியரசு தலைவர், "மிகவும் வேதனையாக உள்ளது. இனியும் இதை ஏற்று கொள்ள முடியாது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். நீண்டகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்களை தடுக்க வேண்டும்.


மாணவர்கள், மருத்துவர்கள், மக்கள் என அனைவரும் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகள் எங்கேயோ அலைந்து திரிந்து வருகின்றனர். தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு, இத்தகைய கொடுமைகள் நடப்பதை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது.


குறைந்த சக்தி படைத்தவர்கள், குறைந்த திறன் உள்ளவர்கள், குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என  பெண்களை தாழ்வானவர்களாக பார்ப்பது இழிவான போக்கு. 2012 ஆம் ஆண்டு நிர்பயா வழக்குக்குப் பிறகு பல ஆண்டுகளாக இந்திய சமூகம் கூட்டு மறதியால் பாதிக்கப்பட்டுள்ளது. அருவருப்பாக இருக்கிறது. இந்த வக்கிரத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சரியான முறையில் கையாள்வோம்" என்றார்.