தேசிய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் பிறந்த தன்னுடைய பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.


இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நான்காவதும் பெண் குழந்தையே பிறந்ததால் அதனால் மன வருத்தத்தில் தன்னுடைய குழந்தையை கொன்றதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். புதிதாகப் பிறந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு, அந்தப் பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தொடரும் சமூக அவலம்: இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "மேற்கு டெல்லியில் உள்ள கியாலா காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு அழைப்பு வந்தது. ஆறு நாட்களே ஆன பெண் குழந்தை காணவில்லை என்று அழைப்பாளர் கூறினார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். பிறந்த குழந்தைக்கு இரவு தாமதமாக தாய்ப்பால் கொடுத்துவிட்டு, தூங்க வைத்ததாகவும் அவர் கூறினார்.


ஆனால், கண்விழித்து பார்க்கையில் என் குழந்தை அங்கு இல்லை. காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தார்கள்.


பெற்ற குழந்தையை கொன்ற தாய்: சோதனை செய்து கொண்டிருக்கும்போது, தன்னுடைய ​​தையல்களை அகற்ற மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று அந்த பெண் கூறினார். அவரின் நடவடிக்கை எங்களுக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு செல்ல அவரை அனுமதித்தோம்.


சோதனையின் போது, ​​பக்கத்து வீட்டின் கூரையில் ஒரு பையை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், பிறந்த குழந்தை இருந்தது. மருத்துவமனைக்கு குழந்தை எடுத்து செல்லப்பட்டது. ஆனால், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.


தாயின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மனம் உடைந்து மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவருக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டது.  


பெண் குழந்தை என்பதால் பல சமூக அவமானங்களை எதிர்கொண்டதாக அந்த பெண் கூறினார். குழந்தைக்கு உணவளிக்கும் போது, ​​இந்த எண்ணங்களால் பயந்து, குழந்தையின் கழுத்தை நெரித்து, பின்னர் அதை அருகில் உள்ள கூரையில் எறிந்ததாக அந்த பெண் கூறினார்" என தெரிவித்துள்ளது.