விஜயதசமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "விஜயதசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி"
விஜயதசமி பண்டிகை அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியைக் குறிக்கிறது. இந்தத் தருணத்தில், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத, கலாச்சார நிகழ்வுகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.
உயர்ந்த மனித லட்சியங்கள் மீதான நமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதை இந்தப் புனிதமான பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. கண்ணியம், கடமைக்கான அர்ப்பணிப்பு, நடத்தையில் தூய்மை, பணிவு, நீதிக்கான போராட்டம் ஆகியவை தொடர்பான பல எழுச்சியூட்டும் கதைகள் இந்த விழாவுடன் தொடர்புடையவை. இந்த கதைகள் நமக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.
நம்பிக்கை, வைராக்கியம் ஆகியவற்றின் அடையாளமான இந்தப் பண்டிகை அனைவருக்கும் வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜயதசமி பண்டிகை:
இந்தியா முழுவதும் ஆயுத பூஜையும், விஜயதசமியும் எப்போதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாட்டில் விஜயதசமி பண்டிகையின்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இன்று ஆயுத பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், நாளை விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, பல்வேறு தலைவர்கள் விஜயதசமி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும்.
விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.
மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி அனைவருக்கும் #ஆயுதபூஜை மற்றும் #விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.