தவறான மருத்துவ அறிக்கையால் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.


கர்ப்பிணிக்குப் பெண்ணுக்கு எடுத்த ஸ்கேன் அறிக்கையின்படி கருவின் வளர்ச்சி சீராக இல்லை எனக் கூறி மருத்துவர் அப்பெண்ணுக்கு கருச்சிதைவு மாத்திரையைக் கொடுக்கவே, அதனால் அந்தப் பெண் உயிரிழக்க நேர்ந்துள்ளது.


கர்ப்பிணி உயிரிழந்த சோகம் :


மும்பை கல்யாண் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 28 வயதான அந்தப் பெண் கடந்த 2021 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர் கருவின் வளர்ச்சி சரியில்லை என அறிக்கை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அவருக்கு கருச்சிதைவு மாத்திரைகள் கிடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் அதுவே அந்தப் பெண்ணின் உயிரைப் பறித்தது. மருத்துவரின் அலட்சியமே அப்பெண்ணின் உயிர் பறிபோகக் காரணமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தும்கூட இதுவரை கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.


மருத்துவர் மீது வழக்கு:


இந்நிலையில், கல்யாண் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையத்தை நடத்திவந்த மருத்துவர் மீது சட்டப்பிரிவு 304 ஏவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கோன்காவோன் காவல் நிலைய அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். 


ஓராண்டுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கின் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


ஸ்கேன்' என்று சொன்னாலே பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எடுக்கப்படும் ஸ்கேன்தான் நினைவுக்கு வரும். இவ்வகை ஸ்கேன் 'அல்ட்ரா சோனோகிராபி' (Ultrasonography) என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மருத்துவத் துறையில் பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கும் முதன்மை ஸ்கேன் பரிசோதனை இதுதான்.


ஸ்கேன் என்பது, பெண்களுக்குக் கருப்பை, சூலகம் ஆகியவற்றின் அமைப்புகளையும் அவற்றின் நோய்களையும் அறிய உதவுகிறது. மார்பகத்தில் தோன்றும் நார்க் கட்டிகளையும் புற்றுநோய்க் கட்டிகளையும் அறிய உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு அவசியம் செய்யப்பட வேண்டிய முதன்மைப் பரிசோதனை இதுதான். ஒரு பெண் கர்ப்பம் அடைந்துள்ளாரா என்பதில் தொடங்கி, சிசுவின் வளர்ச்சி, பிறவிக் கோளாறுகள், ஒற்றைக் குழந்தையா, இரட்டைக் குழந்தையா, பனிக்குடத்தின் தன்மை, நச்சுக்கொடியின் அமைப்பு, குழந்தை ஆணா, பெண்ணா, சுகப் பிரசவம் ஆகுமா எனப் பல விவரங்களை இதில் அறியலாம்.


1994 இல் இந்திய அரசு குழந்தை பிறப்புக்கு முன்னரே அதன் பாலினம் அறிசோதனையையும் பெண்கருக் கலைப்பையும் தடை செய்து சட்டம் கொண்டு வந்துள்ளது. இப்போது இந்தியாவில் கருவின் பாலினத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது சட்டப்படிக் குற்றமாகும்.