குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி முதலமைச்சரும் ஆத் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 


முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


இதனிடையே முன்னதாக ஆம் ஆத்மி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், டெல்லியில் 10 ஆயிரம் பேர் புத்த மதத்துக்கு மாறிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது பேசுபொருளாகியுள்ளது.


இந்துமதக் கடவுள்கள் மேல் நம்பிக்கை இல்லை என்றும், அவர்களை வணங்க மாட்டேன் என்றும் ராஜேந்திர பால் கௌதம் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினரால் பேனர்கள் கிழித்தெறியப்பட்டன.


 






வதோதராவில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவிருந்த மூவர்ணக்கொடி யாத்திரை நிகழ்ச்சியின் பேனர்களையும் முன்னதாக பாஜகவினர் கிழித்தெறிந்தனர். இந்நிலையில், முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பினார். 


தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”என்னைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். எனக்கு அது கவலை இல்லை. ஆனால் அவர்கள் என்னை கண்மண் தெரியாமல் வெறுப்பதோடு,  கடவுள்களையும் அவமதிக்கிறார்கள்” என்றார்.


மேலும் முன்னதாக பரப்புரையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”நான் ஜென்மாஷ்டமி நாளில் பிறந்தேன். என்னை ஒரு நோக்கத்துக்காக கடவுள் அனுப்பி வைத்துள்ளார். கம்சரின் வழித்தோன்றல்களையும் ஊழல் செய்பவர்களையும் அழிக்க கடவுள் என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளார்” எனப் பேசியுள்ளார்.






அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த மூவர்ணக்கொடி யாத்திரை மழை காரணமாக 3 மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய நிலையில், நிகழ்ச்சியில் இந்து புராணக் குறிப்புகளை அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளது கவனமீர்த்துள்ளது.