அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் ஓபிசி மாணவர்களுக்கு மட்டுமே  ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. 


மத்திய அரசு 2008- 2009 ஆம் கல்வி ஆண்டி சிறுபான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  அரசு / அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குக் குறைவாக  இருந்தால் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. 


இந்த நிலையில் இந்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் நவம்பர் 29ஆம் தேதி கடிதம் எழுதியது. அதில், அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி வழங்குவதை அரசு கட்டாயமாக்குகிறது. 


இதனால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், பழங்குடியினர் விவகார அமைச்சகங்களின் முடிவின்படி, தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடையவராகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது நேற்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் விரேந்திர குமார் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.


அதில் அவர் கூறும்போது, ’’அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act) மூலம் 1 மற்றும் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி உறுதி செய்யப்பட்டு விடுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். குறிப்பாக ஓபிசி மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். இதனால் இனிமேல் இவர்கள் மட்டுமே ப்ரீ மெட்ரிக் உதவித்தொகைக்குத் தகுதி ஆனவர்கள் ஆவர்’’ என்று அமைச்சர் விரேந்திர குமார் தெரிவித்துள்ளார். 


இதேபோல மற்றொரு கேள்விக்கு துறை இணை அமைச்சர் பதிலளிக்கும்போது, ’’கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரும் எண்ணமில்லை என்று’’ தெரிவித்தார்.




அண்மையில் 2022-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். 


’மத்திய அரசின் இந்த முடிவினால், தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் ஐந்து லட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகையின் பயன்களை பெற இயலாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவர். ஏழை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி மிகவும் பயனுள்ள கருவி’ என்று தெரிவித்துள்ள  முதலமைச்சர், சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்பதை பல்வேறு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.  


அத்தோடு, இந்த கல்வி உதவித்தொகை ஏழை, பின்தங்கிய மற்றும் பெண் குழந்தைகள் உட்பட, மிகவும் விளிம்பு நிலையிலுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் உதவிகரமாக இருப்பதால், இது தொடரப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.