மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை:


மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 முதல் 55 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில்,  கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த சலுகை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மூத்த குடிமக்கள் அனைவரும் ரயில் கட்டணத்தில் சலுகை எதுவும் இல்லாமல், டிக்கெட்டிற்கான முழு தொகையையும் செலுத்தி பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்தன.


நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை:


இதனிடையே,  மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என,  நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ரயில்களின் அனைத்து பெட்டிகளிலும் வழங்காவிட்டாலும்,  ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் பிரிவு ஏசி வகுப்புகளிலாவது அவர்களுக்கு சலுகை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, விரைவில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.


மீண்டும் சலுகை வழங்கும் திட்டமில்லை:


இந்த சூழலில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டண சலுகை எப்போது மீண்டும் அமலுக்கு வரும் என, மகாராஷ்டிராவை சேர்ந்த சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,  ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை.  பயணிகள் சேவைகளுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.59,000 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இது பெரிய தொகை, பல மாநில அரசுகளின் ஆண்டு பட்ஜெட்டை விட பெரும் தொகை. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியத்திற்காக ரூ.60 ஆயிரம் கோடி, ஊதியத்திற்காக ரூ.97 ஆயிரம் கோடி மற்றும் எரிபொருளுக்காக ரூ.40 ஆயிரம் கோடியையும் ரயில்வேத்துறை செலவழித்து வருகிறது. புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. புதிய நடவடிக்கைகள் ஏதும் வேண்டுமானால் அதை எடுக்க தயார். ஆனால், தற்போதைய சூழலில் ரயில்வேயின் நிலையை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், அமைச்சர் அஷ்விணி வைஷ்னவ் வலியுறுத்தியுள்ளார்.


புதிய திட்டங்கள்:


மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது வந்தே பாரத் ரயில்கள் அதிகபட்சமாக 500 முதல் 550 கிமீ தூரம் வரை உட்காரும் திறனுடன் இயக்கப்படுகின்றன. தூங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், வந்தே பாரத் ரயில்கள் ரயில்கள் நீண்ட தூரத்திற்கு இயக்கப்படும்.  ராமர் கோவில் கட்டும் பணி முடிந்ததும், அயோத்தியை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ரயில்கள் மூலம் இணைக்கும் திட்டமும் நடந்து வருகிறது . 41 முக்கிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மீதமுள்ள ரயில் நிலையங்கள் ஒவ்வொரு கட்டமாக மேம்படுத்தப்படும். 2030-ம் ஆண்டுக்குள் மாசு இல்லா ரயில்வே துறையை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் , இந்திய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அஷ்வினி வைஷ்ணவ் விளக்கினார்.