மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஊடக பிரிவாக பிரசார் பாரதி செயல்பட்டு வருகிறது. இது ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். 


ஓ.டி.டி.யில் கால்தடம் பதிக்கும் பிரசார் பாரதி:


2025-26 ஆண்டுக்குள், ஒளிபரப்பு உள்கட்டமைப்பு நெட்வொர்க் மேம்பாட்டு திட்டத்தின் (BIND) கீழ் ஒளிபரப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தி விரிவாக்கம் செய்ய 2,538.61 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக, பிரத்யேக ஓடிடி தளத்தை உருவாக்க பிரசார் பாரதி திட்டமிட்டு வருகிறது. 


கடந்த ஆண்டு, OTT இயங்குதளமான Yupp TV உடன் பிரசார் பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் காரணமாக DD இந்தியா இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சேனல் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பல தளங்கள் வழியாக கிடைக்கிறது.


விரைவில் செயல்படுத்தப்படும்:


இதுகுறித்து பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் திவேதி கூறுகையில், "BIND திட்டத்தின் கீழ் 28 பிராந்திய தூர்தர்ஷன் சேனல்கள் HD நிகழ்ச்சிகளை தயாரிக்கும் திறன் கொண்டதாக மாறும். மேலும் அகில இந்திய வானொலியின் (AIR) FM கவரேஜ் நாட்டின் 80%க்கும் அதிகமான மக்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், எஃப்எம் ரேடியோ நெட்வொர்க் மற்றும் மொபைல் டிவி தயாரிப்பு வசதிகள் 950 கோடியில் விரிவுபடுத்தி  வலுப்படுத்த கவனம் செலுத்தப்படும். இது, விரைவில் செயல்படுத்தப்படும்.


இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், வளர்ந்து வரும் மாவட்டங்கள், வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பிரசார் பாரதியின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 லட்சத்திற்கும் அதிகமான இலவச டி.டி., டி.டி.எச். ரிசீவர் செட்கள் விநியோகிக்கப்படும். 


உயர்தர உள்ளடக்கம்:


உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு உயர்தர உள்ளடக்கம் வழங்கப்படும். அதிக சேனல்களுக்கு இடமளிக்கும் வகையில் DTH இயங்குதளத்தின் திறன் மேம்படுத்தப்படும். டிடி இலவச டிஷ் திறன் தற்போதுள்ள 116ல் இருந்து சுமார் 250 சேனல்களாக விரிவுபடுத்தப்படும்.


இது 4.30 கோடி இணைப்புகளைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய டிடிஹெச் தளமாக உள்ளது. நாட்டில் AIR FM கவரேஜ் புவியியல் பரப்பளவில் 58.83% இலிருந்து 66.29% ஆக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய-நேபாள எல்லையில் 48.27% ஆக இருக்கும் FM வரம்பை 63.02% ஆகவும், ஜம்மு & காஷ்மீர் எல்லையில் 62% லிருந்து 76% ஆகவும் அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். 


ராமேஸ்வரத்தில் உள்ள 300 மீட்டர் கோபுரத்தில் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20 கிலோவாட் எஃப்எம் டிரான்ஸ்மிட்டர் நிறுவப்படும். விஜயவாடா மற்றும் லேயில் உள்ள தூர்தர்ஷன் கேந்திராக்கள் 24 மணி நேர சேனல்களாக மேம்படுத்தப்படும்.


இது தவிர, 31 பிராந்திய செய்தி அலகுகள், திறமையான செய்தி சேகரிப்புக்காக சமீபத்திய உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்படும்" என்றார்.