Kerala Briyani  : கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் ஒருவர்  உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இளம்பெண் உயிரிழப்பு:


கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரஷ்மி (20). இவர் அதே பகுதியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள பிரபல உணவகத்தில் அல்ஃபாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணியை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.


இதையடுத்து, சில மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் கோட்டயத்தில் இருக்கும் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை மோசமான காரணத்தால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அந்த உணவுகத்தில் பிரியாணி சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அனைவரும் மாவட்ட மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.


அதிரடி சோதனைகள்:


அந்த பெண் உயிரிழந்ததை அடுத்து,  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை செய்து சீல் வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ச் அனைத்து உணவகத்திலும் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் 43 உணவகங்களை மூட உத்தரவிட்டு, 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மேலும் அவர் கூறியதாவது, "உணவில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ச் கூறியுள்ளார்.  இந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


சிறுமி உயிரிழப்பு:


முன்னதாக, கேரளா மாநிலம் காசர்கோடு அருகே 16 வயதுச் சிறுமி தேவநந்தா, சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்தக் கடையில் சாப்பிட்ட 49 பேர் வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிய அனுமதி இன்றி இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்ததும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கடை மேலாளர், ஷவர்மாவைத் தயாரித்த இருவர் மற்றும் இணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்துவிட்டு தலைமறைவு: தட்டித்தூக்கிய காவல்துறை...!


மேலும் படிக்க: வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு...நாளை தொடக்கம்...முக்கியத்துவம் என்ன?