நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு மறைந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


ராகுல் காந்தி பற்றி பிரணாப் முகர்ஜி கூறியது என்ன?


இந்திரா காந்தி தொடங்கி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவை வரையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகும், 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதிலும் பிரணாப் முகர்ஜியே பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் கடைசி வரை அந்த பதவியை அடைய முடியவில்லை.


இச்சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரணாப் முகர்ஜி கொண்டிருந்த உறவு குறித்து அவரது மகள் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி, தனது தந்தை குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நேரு குடும்பம் பற்றியும் ராகுல் காந்தி பற்றி பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளது.


ராகுல் காந்தியுடன் இருப்பவர்களுக்கு காலை எது, இரவு எது என்பது பற்றி கூட தெரியாது என பிரணாப் முகர்ஜி தன்னிடம் தெரிவித்ததாக அவரது மகள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "ஒரு நாள் காலை, முகலாயத் தோட்டத்தில் (குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டம்) பிரணாப்பின் வழக்கமான காலை நடைப்பயிற்சியின் போது, ​​ராகுல் அவரைப் பார்க்க வந்தார். 


"அரசியல் புரிதல் இல்லை"


காலை நடைப்பயிற்சியின் போதும் பூஜையின் போதும் எந்த தடங்கலும் ஏற்படுவதை பிரணாப் விரும்பவில்லை. இருப்பினும், அவரை சந்திக்க முடிவு செய்தார். உண்மையில் மாலையில்தான் பிரணாப்பை ராகுல் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிரணாப் உடனான சந்திப்பு காலை என அவரது (ராகுல்) அலுவலகம் தவறுதலாக அவருக்குத் தெரியப்படுத்தியது. 


இச்சம்பவம் குறித்து ராகுல் காந்தியின் உதவியாளர் ஒருவரிடம் இருந்து தெரிந்து கொண்டேன். நான் என் தந்தையிடம் கேட்டபோது, ​​அவர் ஏளனமாக கருத்து தெரிவித்தார். ராகுலின் அலுவலகத்துக்கு a.m. எது p.m. எது என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், அவர்கள் எப்படி ஒரு நாள் பிரதமர் அலுவலகத்தை இயக்குவார்கள் என்று நம்புகிறார்கள்? என பிரணாப் கூறினார்" என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லையாம். இதுபற்றி புத்தகத்தில் குறிப்பிட்ட பிரணாப்பின் மகள், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விழாவில் ராகுல் கலந்து கொள்ளவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. 


அவர் (ராகுல்) எல்லாவற்றையும் மிக எளிதாகப் பெற்றதால், அவர் அதை மதிக்கவில்லை. சோனியா, தனது மகனை வாரிசு ஆக்குவதில் குறியாக இருக்கிறார். ஆனால், அவருக்கு (ராகுல்) அரசியல் புரிதல் இல்லாதது சிக்கலை உருவாக்குகிறது. அவரால் காங்கிரஸை உயிர்ப்பிக்க முடியுமா? அவர் மக்களை ஊக்குவிக்க முடியுமா? என எனக்கு தெரியாது" என்றார்.