நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடந்தது. மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் திமுக எம்பி செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்.


சர்ச்சையில் சிக்கிய திமுக எம்பி செந்தில்குமார்:


அப்போது, "பாஜகவின் பலம் என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே என்பதை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நாட்டின் இதயப்பகுதி என சொல்லப்படும் இந்தி மாநிலங்களில்தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அதை, நாங்கள் வழக்கமாக மாட்டு மூத்திர மாநிலங்கள் என்றுதான் சொல்வோம்" என குறிப்பிட்டிருந்தார்.


திமுக எம்பி செந்தில்குமாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக எம்பியின் பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே கண்டித்தது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், "எம்பி செந்தில்குமார் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் மிகவும் எதிர்பாராத வார்த்தைகள். அவை நாகரிகத்துக்கு உகந்தவை அல்ல. செந்தில்குமார் அவரது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு, தான் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


ஏற்கனவே, சனாதனம் பற்றி உதயநிதி பேசியது வடமாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு, சனாதனம் குறித்து உதயநிதி பேசிய பேச்சே காரணம் என சிலர் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், வட இந்திய மாநிலங்களை பசு மூத்திர மாநிலங்கள் என திமுக எம்பி குறிப்பிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


கொந்தளித்த நாடாளுமன்றம்:


இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "பொது வெளியில் கருத்துக்களை சொல்லும் போது கண்ணியத்துடன் பேச வேண்டும்" என்றார். 


இந்த நிலையில், இந்த விவகாரத்தை முன்னிறுத்தி பாஜக எம்பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். தனது கருத்துக்கு திமுக எம்பி, மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த செந்தில்குமார், "நான் கவனக் குறைவுடன் நேற்று பேசிவிட்டேன்.


உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதை திரும்பப் பெற்று கொள்கிறேன். நான் குறிப்பிட்ட வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வருந்துகிறேன்" என்றார்.