Prajwal Revanna Case: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச். டி. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


புயலை கிளப்பும் அந்தரங்க வீடியோக்கள்:


சமூக வலைதளங்களில் உலா வரும் அந்த ஆபாச வீடியோக்களில் சில பெண் அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். இதனால் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரி கர்நாடக பெண்கள் ஆணையம் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


பெண்களை கட்டாயப்படுத்தி இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என கர்நாடக பெண்கள் ஆணையம் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், பெண்களை இப்படி பாலியல் ரீதியாக சுரண்டுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக ஹாசன் தொகுதியில் களமிறங்கியுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா.


பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டனரா?


ஹாசன் தொகுதிக்கு நேற்று முன்தினம்தான் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல் நடந்த அடுத்த நாளே இந்த வீடியோ வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சர் கூறுகையில், "பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.


ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்தப் பின்னணியில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு மகளிர் ஆணையத் தலைவர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.


இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நேற்று காலை 3 மணிக்கு ஜெர்மனிக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார், "இது தொடர்பாக மகளிர் ஆணையம் பல புகார்களை அளித்துள்ளது.


முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறையுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நிலைமையையும் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்று நினைக்கிறேன். இப்போது அவர் கூட்டணியில் அங்கம் வகிப்பாரா இல்லையா என்பதை பாஜக முடிவு செய்ய வேண்டும். அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து பிரதமர் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.


சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் பொய்யானவை என்றும் எடிட் செய்யப்பட்டவை என்றும் பிரஜ்வல் ரேவண்ணா விளக்கம் அளித்துள்ளார். வாக்காளர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுக்கும் விதமாக இப்படிப்பட்ட வீடியோவை பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.