மைசூரு மாநகராட்சி ஆணையர் ஷில்பா நாக் மற்றும் மைசூரு துணை ஆணையர் ரோஹிணி சிந்தூரி ஆகியோர் பணி செய்வதில் அதிகாரப் போட்டியை கடைபிடித்து வந்தனர். இதன் தாக்கம் மாநகராட்சி பணிகளில் எதிரொலிக்கவே இருவரையும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது கர்நாடக மாநில அரசு. கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவில் சேர்ந்த ரோஹிணி, சிந்துரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணிக்கு சேர்ந்த ஷில்பா நாக் இ-சேவை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்ராஜ் வளர்ச்சி ஆகிய துறைகளுக்கான ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரோஹினி சிந்தூரி, தன்னை அவமானப்படுத்தியதாக ஷில்பா நாக் குற்றம்சாட்டியதோடு, கடந்த மே 3-ஆம் தேதி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது கையால் எழுதப்பட்ட 18 பக்க கடிதத்தில் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அடுத்த சிலமணி நேரங்களிலேயே ரோஹிணி சிந்தூரி ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டார். அதில் ஷில்பா நாக்கிடம் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி 123 கோடி ரூபாயை முறையாக பயன்படுத்திய விவரத்தை தான் கேட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் கர்நாடக அதிகார மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இந்த மோதல் போக்கு மாநில அரசின் கையால் ஆகாத நிலையை, வெளிப்படுத்துவதாகவும், மாநகர ஆணையரும் துணை ஆணையரும் இப்படி பொதுவெளியில் சண்டை போட்டுக்கொள்வது, மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என விமர்சித்திருந்தார். இரு அதிகாரிகளின் அதிகார மோதல் விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் தாக்கல் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்க உள்ளதாகவும் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டு அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிந்தூரிக்கு பதிலாக, பகதி கவுதம் மைசூரு மாநகராட்சி துணை ஆணையராகவும், ஷில்பா நாகுக்கு பதிலாக லட்சுமிகாந்த் ரெட்டி மைசூரு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதலை தொடர்ந்து கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் பி.ரவிக்குமார் கடந்த மே 4-ஆம் தேதி மைசூருவில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
அக்கூட்டத்தில் இரண்டு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கும் வகையில் நூறுபக்க விளக்க அறிக்கையை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஷில்பா நாக் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளரிடம் அளிக்கமுயன்ற நிலையில் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக மைசூருவில் கோவிட் 19 நிவாரண பணிகளில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். முன்னதாக தான் வசிக்கும் அரசு இல்லத்தில் 50 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளம் கட்டியது தொடர்பாக ரோஹினி சிந்தூரிக்கு எதிராக கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.