சரத்பவாரை ஊழல்வாதி என விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட நடிகை கேதகி சித்தாலே 39 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். தனக்கு நடந்தது சட்டத்திற்கு புறம்பானது என்று கருத்து தெரிவித்துள்ளார். 


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத்த் தலைவர் சரத்பவார். இவரைப் பற்றி  மராத்தி நடிகை கேதகி சித்தாலே என்பவர், தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த மே மாதம் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் சரத்பவார் ஒரு ஊழல்வாதி என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நடிகை கேதகி சித்தாலே மீது காவல் துறையில் புகார் கொடுத்தனர். புகாரினை அடிப்படையாகக் கொண்டு, நடிகை கேதகி சித்தாலேவை விசாரணைக்கு நவிமும்பை கலம்பொலி காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், நடிகை கேதகி சித்தாலே மீது மை வீசி தாக்குதலில் ஈடுபட முயன்றனர். பின்னர், அவரை விசாரித்த குற்றப்பிரிவு காவலர்கள்,  நடிகையை கைது செய்தனர். இதனால் 39 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டார் நடிகை கேதகி சித்தாலே. 


39 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, வெளியில் வந்த நடிகை கேதகி சித்தாலே, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ”தனக்கு நடந்தது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது. என்னை கைது செய்ய வந்தபோது போலிசாரிடம் முறையான வாரண்ட் இல்லை. மேலும் கைது செய்வதற்கான முகாந்திரமே இல்லாததால், உரிய ஆவணங்களே இல்லாமல் அழைத்துச் சென்று, அதன் பின்னர் என்னை சிறைப்படுத்துவதற்கான ஆவணங்களை தயார் செய்தனர். நான் சிறையில் இருந்து வரும்போது சிரித்துக் கொண்டு வந்தேன். அதற்காக இந்த சட்டப்போராட்டம் முடிவடைந்து விட்டது என்று இல்லை. நான் பெயிலில் தான் வெளிவந்திருக்கிறேன். என்மீது பதியப்பட்டுள்ள மொத்தம் 22 எஃப்.ஐ.ஆர்களில் ஒன்றுக்கு மட்டும் தான் பெயில் கிடைத்திருக்கிறது. மீதம் 21 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் நான் எனது பதிவில் சரத்பவார் என, எங்கும் குறிப்பிடவில்லை. பவார் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். மக்கள் அதனை தவறாக திரித்து விட்டுள்ளனர், மேலும் மற்றவர்களை இழிவு செய்வது என்பது என்னுடைய நோக்கமில்லை. நான் சரத்பவார் என எங்கும் குறிப்பிடவில்லை, ஆனால் என்மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் சரத்பவாரை நான் அவ்வாறாக குறிப்பிட்டிருக்கிறேன் என்கிறார்கள், இப்போது இவர்கள் தான் சரத்பவார் ஊழல்வாதி என்கிறார்கள். காவல் துறை அலுவலக வளாகத்திற்குள் நான் இருக்கும் போது நான் தாக்கப்பட்டேன். நான் அவர்களுக்கு எதிராக புகாரளிக்க உள்ளேன்.  எனக்கு நடந்தது சட்டவிரோதம்” எனவும் குறிப்பிட்டார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண