தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவில் கால் வைக்க துடிக்கும் திமுக குறிப்பாக ஒரு தொகுதியை குறிவைத்து வேலை செய்து வருகிறது. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவில் புனலூர் சட்டமன்ற தொகுதியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. 

கேரளா மீது கண் வைக்கும் ஸ்டாலின்:

தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டை தாண்டி தென் மாநிலங்களில் தனது செல்வாக்கை பெருக்கி கொள்ள திமுக திட்டமிட்டு வருகிறது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ள திமுக, தனது செல்வாக்கை விரிவுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருகிறது. இதற்காக திமுக தேர்வு செய்த தொகுதிதான் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூர் சட்டமன்ற தொகுதி. தென்காசியுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள புனலூரில் குறிப்பிடத்தகுந்த அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தொழிலாளர் வர்க்கம் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களை, திமுக கேரள தலைமை தங்கள் பின்னால் திரட்டி ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது.

தென்காசி அருகே உள்ள 1 தொகுதிக்கு குறி:

கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகளை நியமித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில திமுக பொறுப்பாளர் கே.ஆர். முருகேசன் கூறுகையில், "கேரள மக்கள் இடையே திமுகவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இது, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நல்ல சோதனையாக இருக்கும். கேரளாவில் தேர்தல் களத்தில் இறங்கினால், மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் சேரத் தயாராக உள்ளனர்" என்றார்.

மேலும் பேசிய அவர், "மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகள், 14 மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இடுக்கியைத் தவிர, அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். புனலூர் எங்கள் கோட்டை.

புனலூரில் உள்ள எவரும் அங்கு திமுக எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை உங்களுக்குச் சொல்வார்கள். புனலூர் நகராட்சியில் வாரத்திற்கு ஒரு நிகழ்ச்சியையாவது நடத்தி வருகிறோம். தீவிரமாக இயங்கி வருகிறோம்" என்றார்.

புனலூர் தொகுதியின் வரலாறு:

புனலூரில் ஆரியங்காவு, தென்மலா, குளத்துப்புழா, எரூர், கரவலூர், அஞ்சல், எடமுலக்கல் ஆகிய ஏழு கிராம ஊராட்சிகளிலும் திமுக வார்டு அளவிலான கிளை அமைப்புகளை கொண்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு, புனலூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில், தனியாகப் போட்டியிட்ட திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்ததாக திமுக தலைவர்கள் கூறுகின்றனர். கடுமையான போட்டிக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

புனலூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கேரள மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து நடத்தப்பட்ட 17 தேர்தல்களில் 14 முறை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தற்போது அந்த தொகுதியின் எம்எல்ஏவாக பி.எஸ். சுபால் உள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகள் தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலத்தில் போட்டியிடுவது இது முதல்முறை அல்ல. கர்நாடகாவில் கோலார் தங்க வயல் சட்டமன்ற தொகுதியில் 3 முறையும் காந்திநகர் தொகுதியில் 1 முறையும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.