வட இந்தியாவில் அடிக்கடி விநோதமான, வித்தியாசமான சம்பவம் நடைபெறுவது வழக்கம். இந்த சூழலில், இன்று உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பெடாபூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் இருந்து 125 கிலோமீட்டர் பகுதியில் அமைந்துள்ளது பிண்ட்கி கோட்வாலி பகுதி.
இந்த பகுதியில் அந்த மாநில போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஒரு ஷேர் ஆட்டோ வேகமாக வந்தது. அதை அங்கிருந்த போலீசார் மடக்கியுள்ளனர். பின்னர், ஆட்டோவைப் பார்த்தபோது ஆட்டோவில் ஆட்கள் அதிகளவில் இருந்துள்ளனர். உடனே அனைவரையும் கீழே இறங்கச் சொல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோவில் இருந்து ஒருவர் பின் ஒருவராக பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று ஆட்கள் இறங்கிக்கொண்டே இருந்தனர். அள்ள அள்ளக் குறையாத என்ற வசனம் இருப்பதுபோல, ஒருவர் இறங்க ஒருவர் என்று ஆட்டோவில் இருந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வழியாக ஆட்டோவில் இருந்து அனைவரும் இறங்கினர். மொத்தம் அந்த ஆட்டோவில் 27 பேர் பயணித்துள்ளனர். இதைக்கண்ட போலீசாரே ஆச்சரியத்தில் திகைத்துள்ளனர்.
ஷேர் ஆட்டோவில் ஒரு ஆட்டோவிற்கு இத்தனை நபர்கள் வீதம் மட்டுமே ஆட்களை ஏற்ற வேண்டும் என்று மாநிலத்திற்கு மாநிலம் நிபந்தனை உள்ளது. ஆனால், விபத்து அபாயம் துளியளவு கூட இல்லாமல் 27 பயணிகளை ஏற்றிச்சென்ற ஓட்டுனரை போலீசார் கடுமையாக கண்டித்தனர். அதுமட்டுமின்றி, சாலை விதிகளை மீறியதாக கூறி அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு ரூபாய் 11 ஆயிரத்து 500 அபராதமாக விதித்தனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கே வழியில் சென்ற நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திடீரென போலீசார் 11 ஆயிரம் விதித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவில் பயணித்தவர்களின் உதவியுடன் அனைவரும் பகிர்ந்து 11 ஆயிரத்து 500 அபராதத்தை செலுத்தினர்,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்