கடந்த 4 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 700 இளைஞர்களை தீவிரவாத இயக்கங்கள் வேலைக்கு எடுத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜம்மு&காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 700 இளைஞர்களை தீவிரவாத இயக்கங்கள் வேலைக்கு எடுத்துள்ளதாகவும், 141 வெளிநாட்டு தீவிரவாதிகள் காஷ்மீரில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளதாக கூறியுள்ளது.




ஜம்மு காஷ்மீரில் கணிசமான எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் இருப்பது, எல்லையில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களில் இருந்து ஊடுருவல் தடையின்றி தொடர்வதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி ஜூலை 5ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் 82 வெளிநாட்டு தீவிரவாதிகள் மற்றும் 59 உள்ளூர் தீவிரவாதிகள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக கூறியுள்ளது.  இந்த தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.




கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் 700 உள்ளூர் இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. 2018ம் ஆண்டில் 187 பேரையும், 2019ல் 121 பேரையும், 2020ல் 181 பேரையும், 2021ல் 142 பேரையும் தேர்ந்தெடுத்துள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 69 குழந்தைகளையும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த ஆண்டில் இதுவரை இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்தியுள்ள 55 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 125 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 91 பேர் உள்ளூர் தீவிரவாதிகள் என்றும் 34 பேர் வெளிநாட்டினர். மேலும், 123 தீவிரவாதிகள் இந்த தாக்குதலின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகப்படியான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். வெளியாகியுள்ள தகவலின் படி ஜம்மு காஷ்மீரில் கடந்த 2021ல் 172 தீவிரவாதிகளும், 2020ல் 251 தீவிரவாதிகளும், 2019ல் 148 தீவிரவாதிகளும், 2018ல் 185 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 




இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்றுள்ள தீவிரவாதத் தாக்குதல்களில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்களில் 20 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2021ம் ஆண்டு 146 தீவிரவாதிகள், 3 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 41 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2020ல் 215 தீவிரவாதிகள் 19 பாதுகாப்பு வீரர்கள், 38 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2019ல் 148 தீவிரவாதிகள், 49 பாதுகாப்பு அதிகாரிகள், 46 பொதுமக்களும், 2018ம் ஆண்டில் 185 தீவிரவாதிகள் 7 பாதுகாப்புப் படையினர் மற்றும் 72 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.




தீவிரவாதத் தாக்குதல்களில் 2021ல் 63 பாதுகாப்பு அதிகாரிகளும், 2020ல் 165 அதிகாரிகளும், 2019ல் 376 அதிகாரிகளும், 2018ல் 765 அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.