புனே ரயில் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் ஆர்பிஎஃப் போலீஸ் அதிகாரி ஒருவர் தண்ணீரை ஊற்றுவது போன்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவின் கீழ், "RIP மனிதநேயம். புனே ரயில் நிலையம்" என்று ஒரு தலைப்பு இடம் பெற்றிருந்தது. 


 


புனே ரயில் நிலையத்தில் 17 வினாடிகள் கொண்ட கிளிப்பில், தூங்கி கொண்டிருந்த பயணிகளுக்குப் பின்னால் ஒரு காவல்துறை அதிகாரி தண்ணீர் பாட்டிலுடன் மெதுவாக நடக்கிறது. தண்ணீர் பாட்டிலின் முன் பகுதியில் சிறிய ஓட்டை போடப்பட்டு அதன் வழியாக வெளியேறும் தண்ணீரில், படுத்திருக்கும் பயணிகள் மீது தெளிக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் பதறி அடித்துகொண்டு எழுந்திரிக்க, ஒரு முதியவர் உட்பட மற்றவர்கள் மீதும் தண்ணீர் விழுந்தவுடன் திடீரென எழுந்திருக்கிறார்கள்.






இந்த வீடியோவை எடுத்த நபர் சமூக வலைதளங்களில் பதிவிட, இதை பார்த்த ட்விட்டர் வாசிகள் “ இது மனிதாபிமானற்ற செயல்” என பதிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) துபே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்ஃபார்மில் தூங்குவது மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான். ஆனால், இதை கையாளும் விதமும், ஆலோசனை வழக்கும் விதமும் இதுவல்ல. பயணிகளிடன் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்தார். 






இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க அதிக காத்திருப்புப் பகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 


பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்க ரயில் நேரத்துக்கு சரியாக வர வேண்டும் என்றும் தெரிவித்தனர். மற்றொரு சிலர், காவல்துறை அதிகாரியின் செயலுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள் அவரது கடமையை சரியாகதான் செய்தார்கள். பிளாட்பாரங்கள் மற்றும் படிக்கட்டுகளில் மக்களை தூங்க அனுமதித்தால், அது அவசரமாக பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று தெரிவித்தனர்.