மும்பையில் மருத்துவர் ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கிய நிலையில், அதில் வெட்டப்பட்ட மனித விரல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 


ஐஸ்கிரீமில் மனித விரல்:


ஐஸ்கிரீம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. விதவிதமான கலர்களில், வடிவங்களில், சுவைகளில் கிடைக்கும் ஐஸ்கிரீம்களுக்கு வயது வித்தியாசமில்லாமல் அனைவருமே அடிமைகள் தான். அப்படிப்பட்ட ஐஸ்கிரீம் சில நேரங்களில் எதிர்பார்த்த அமையாமல் போவதில் ஏமாற்றம் அடைபவர்களும் உண்டு. இதிலும் கலப்படம் நடப்பதால் உண்மையான ஐஸ்கிரீமை தேடி அலைபவர்கள் அதிகம். இப்படிப்பட்ட நிலையில் ஆன்லைனில் வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்துள்ளது. 


இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள  மலாடில்  டாக்டர் பிரெண்டன் ஃபெராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் ஆப் மூலம் யம்மோ பிராண்டின்  மூன்று ஐஸ்கிரீம் கோன்களை ஆர்டர் செய்துள்ளார். அதில் பட்டர்ஸ்காட்ச் சுவை கொண்ட ஐஸ்கிரீமும் ஒன்று. ஆர்டர் வந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களுடன் அதனை சாப்பிட தொடங்கியுள்ளார். 






அதில் பிரெண்டன் ஃபெராவ் சாப்பிட்ட பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீமில் நடுப்பகுதி வந்தவுடன் அவருக்கு நட்ஸ் வகையை சேர்ந்த ஏதோ ஒன்று பல்லில் பட்டுள்ளது. பெரிதாக இருந்ததால்  சந்தேகம் வரவே என்னவென்று பார்த்துள்ளார். அப்போது அதில் மனித விரல் ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரெண்டன் ஃபெராவ் உடனடியாக அதனை முழுவதுமாக பிரித்து பார்த்துள்ளார். மேலும் அந்த விரலில் ஆணி ஒன்று இருந்துள்ளது. 


அலட்சியத்தின் உச்சம்:


மேலும் அந்த ஐஸ்கிரீம் ஒரு மாதத்துக்கு முன்னால் தயாரிக்கப்பட்டதாக தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இது அலட்சியத்தின் உச்சம் என டாக்டர் பிரெண்டன் ஃபெராவ் குற்றம் சாட்டியுள்ளார். நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது மன உளைச்சல் அதிகமாகி வருவதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை யம்மோ ஐஸ்கிரீமை தடயவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விரல் உண்மையில் மனிதர்களுடையது தானா? அல்லது வேறு எதுவுமா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மும்பையில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் பிற தயாரிப்புகளிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.