உத்தரப்பிரதேசம் புலாந்த்ஷர் பகுதியில் தன்னை ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு, சிரித்துக் கொண்டே வீடியோ வெளியிட்ட அத்னான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது..?
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை உத்தரப்பிரதேசத்திலுள்ள குர்ஜாவின் மொஹல்லா கீர்கானியில் அமைந்துள்ள கல்லறையில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை உள்ளூர் மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது, அந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக, உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டபோது அந்த பெண் அஸ்மான் (30) என அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்தபோது, கலிந்திகுஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞர் அத்னான் இந்த கொலையை செய்ததாக தெரிய வந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அத்னானை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இளைஞர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்:
ஏன் இப்படி செய்தாய் என காவல்துறையினர் கேள்வி கேட்கவே, அத்னான் அதிர்ச்சிகர வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “ பல வருடங்களாக நானும் அஸ்மாவும் காதலித்து வந்தோம். முன்பு அஸ்மாவிடம் ஒரு சிறிய மொபைல் இருந்தது. அதில் பேசும்போது சரியாக கேட்காது என்பதால், அஸ்மாவுக்கு சில நாட்களுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய போன் ஒன்றை வாங்கி கொடுத்தேன். அப்போதிலிருந்து நான் அஸ்மாவுக்கு கால் செய்யும்போதெல்லாம் நம்பர் பிஸியாகவே இருந்தது. இதனால் அஸ்மா வேறு சில இளைஞருடனும் பேசுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இருவரும் கீர்கானியில் உள்ள கல்லறையில் அடிக்கடி சந்தித்து பேசுவோம். கடந்த செவ்வாய்க்கிழமை கல்லறைக்கு அஸ்மாவை பார்க்க வேண்டும் என்று வர சொன்னேன். அப்போது அஸ்மாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, மற்ற இளைஞர்களிடம் பேசி வந்தது எனக்கு தெரிந்தது. கத்தியுடன் சென்றிருந்த நான், அஸ்மாவை மயானத்தில் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்து சென்றேன். யாரும் பார்க்காத இடத்தில் வைத்து, மொபைலில் வீடியோவை எடுத்தவாறே அவரது கழுத்தை அறுத்தேன். தொடர்ந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கினேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகரான நான், ‘பல்லு’ படத்தில் சஞ்சய் தத் செய்ததை பார்த்து நானும் இதுபோல செய்தேன். இனி தனது நண்பர்களின் காதலியும் அவர்களை ஏமாற்றினால், இதுபோல்தான் கொலை செய்வேன்” என மிரட்டல் விடுத்துள்ளார்.