தனக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த லைன் மேன் ஒருவர் காவல் நிலையத்திற்கு மின்சாரத்தை துண்டித்தார். இதனால் அந்த ஊரில் காவல்துறைக்கும், மின்வாரியத் துறைக்கும் பனிப்போரே நடக்கிறது.


உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் தான் இந்தச் பனிப்போர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.


நடந்தது என்ன?


ஷாம்லி மாவட்ட மின் வாரியத்துறை லைன் மேன் மேத்தாப். இவர் மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றுகிறார். தானா பவன் பவர்ஹவுஸில் இவருக்கும் பணி. இவர் அண்மையில் இருசக்கர வாகனத்தின் வெளியே சென்றிருந்தார். சார்தாவல் திராஹே பகுதியில் இவரை மடக்கிய போக்குவரத்துப் போலீஸார் பல்வேறு விதிமீறல்களுக்காக ரூ.6000 அபராதம் விதித்தனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த லைன் மேன் தன் மனக்குமுறலை மின் வாரியத்தில் கொட்டித் தீர்த்துள்ளார். மின் வாரியத்திற்கு கோபம் ஷாக் அடிப்பதுபோல் தலைக்கேற ஷாம்லி காவல்நிலைய மின் கட்டண கணக்குகளை புரட்டியுள்ளனர். காவல்நிலையம் சார்ப்பில் ரூ.56,000 நிலுவைத் தொகை இருப்பதைக் கண்டறிந்தனர். 






இதுபோதாதா உடனே நிலுவைத் தொகையை செலுத்தக் கூறியதுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் காவல் நிலையத்திற்கு மின் விநியோகத்தை நிறுத்தினர்.


காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள மின் கம்பத்தில் மின் ஊழியர்கள் ஏறி காவல் நிலைய மின் இணைப்பைத் துண்டிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டராட்டி தவறு செய்தால் தண்டனை கிடைக்கத்தானே செய்யும். போக்குவரத்து விதிமீறல் செய்தால் அபராதம் கட்ட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்று கூறியுள்ளார்.


இன்னொரு நெட்டிசன், எல்லாம் சரி அபராதம் விதித்தவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு பவர் கட் செய்கிறார்கள். ஆனால் சாமான்ய மனிதன் ஏதோ நெருக்கடி காரணமாக ஒரு மாதம் நிலுவைத் தொகை வைத்தால் ஏற்றுக் கொள்வார்களா? அரசு அலுவலகங்கள் முறையாக மின் கட்டணத்தை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.