உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை ஆசிரியை அறைய சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இஸ்லாமிய மாணவனை அறையும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர் உத்தரவிடுவது பதிவாகியுள்ளது.
சக மாணவர்களை விட்டு இஸ்லாமிய சிறுவனை அறைய சொன்ன ஆசிரியை:
அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக ஆசிரியை மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது வீடியோவில் பதிவாகியிருந்தது. ஆசிரியை திரிப்தா தியாகி, மதவாக கருத்துக்களைக் கூறி, வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை விட்டு கடுமையாகத் தாக்குமாறு தூண்டுவதும் கன்னத்தில் கண்ணீருடன் சிறுவன் தேம்பி தேம்பி அழுவதும் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்பான தகவல்களை பத்திரிகையாளர் முகமது ஜுபைர் வெளியிட்டதாகக் கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இம்மாதிரியான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் மைனராக (18 வயதுக்கு கீழ்) இருக்கும் பட்சத்தில் அவரின் அடையாளத்தை தெரியப்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிடக் கூடாது.
இப்படிப்பட்ட சூழலில், சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை கண்டறிந்து உண்மை செய்திகளை வெளியிடும் ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், சிறுவன் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி உத்தர பிரதேச காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
பத்திரிகையாளர் முகமது ஜுபைர் மீது பாய்ந்த வழக்கு:
முகமது ஜுபைர் மீது சிறார் நீதிச் சட்டம் பிரிவு 74இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு தத் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பாதிக்கப்பட்ட சிறுவனின் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு எதிராக எச்சரித்திருந்தது. குறிப்பாக, சிறுவனை அறையும் வீடியோவைப் பகிரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், "எனது மகன் அவமானப்படுத்தப்பட்டு, பல மணிநேரம் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எனது குழந்தையை மாணவர்களை விட்டு மீண்டும் மீண்டும் அடிக்க வைத்துள்ளார் அந்த ஆசிரியை. ஓரிரு மணிநேரம் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனான். பயந்துவிட்டான்" என்றார்.
தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ள ஆசிரியை, "சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாததால் சில மாணவர்களை விட்டு அவனை அறையும்படி சொன்னேன். அந்த மாணவனிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் இருந்து அழுத்தம் வந்தது. நான் மாற்றுத்திறனாளி. அதனால் சில மாணவர்களை விட்டு அறைந்தேன். அதனால்தான், அவர் வீட்டுப்பாடம் செய்யத் தொடங்கினான்" என்றார்.