சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு யார் காரணம் என, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.


சந்திரயான் 3 விண்கலம்:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23ம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.  இதற்காக உலக நாடுகள் பலவும் இந்தியாவையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களையும் பாராட்டி கொண்டாடி வருகின்றன.


சாதி வெறி:


இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டதன் மூலம், சந்திரயான் 3 திட்டம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆனால், இதயெல்லாம் மறந்துவிட்டு, எவ்வளவு கீழ்தரமாக சிந்திக்க முடியுமோ அந்த அளவிற்கு பலர் செயல்பட்டுள்ளனர்.


உதாரணமாக சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக பணியாற்றிய விரமுத்துவேல் தொடர்பாக பொதுமக்கள் தேடி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், வீர முத்துவேல் என்ற அவரது பெயரை கூகுளில் டைப் செய்தாலே அவர் என்ன சாதி என்பது தான் முதன்மையான பரிந்துரையாக வந்து நிற்கிறது. அந்த அளவிற்கு அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற தேடல் கூகுளில் நடைபெற்றுள்ளது. அவரது வெற்றியை ஒரு சாதிக்கானதாக உரிமை கொண்டாடும் அளவிற்கு சாதி வெறி வலுப்பெற்றுள்ளது.


இஸ்ரோவில் அரசியல்:


ஆராய்ச்சியாளர்கள் எந்த மாநிலத்தவர்கள், எந்த மொழி பேசும் நபர்கள், எந்த ஜாதி என பெரும் வார்த்தை போரே, சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. இதற்கு சற்றும் சளைக்காமல், இந்த வெற்றி எங்களுக்கானது என உரிமை கொண்டாடி வருகின்றனர் இந்திய அரசியல்வாதிகள். இவர்கள் பேசுவது எல்லாம் பார்த்தால் அரசியல் கட்சிகள் தான் விண்கலத்தையே வடிவமைத்து சந்திரயான் 3-ஐ நிலவில் தரையிறக்கியதை போன்று தான் உள்ளது.


பாஜக - காங்கிரஸ் மோதல்:


இதனிடையே, பிரதமர் மோடி வந்த பிறகு தான் இஸ்ரோ வளர்ச்சி கண்டுள்ளது. அவர் முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தான் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சந்திரயான் 3-ன் வெற்றி என்பது பாஜக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்ற அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தொடங்கி முக்கிய தலைவர்கள் வரை பேசி வருகின்றனர். அதோடு, இஸ்ரோ வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை எனவும், ஆராய்ச்சியாளர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைத்தது தான் அவர்களுக்கான பெருமை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.


அதேநேரம், சந்திரயான் 3-ன் வெற்றி என்பது இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கும், இஸ்ரோ அமைப்பை உருவாக்கிய மறைந்த பிரதமர் நேருவையுமே சாரும் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “நேரு அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தார். இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை ஜீரணிக்க முடியாதவர்கள், டி.ஐ.எப்.ஆர். தொடக்க விழாவில் அவர் பேசிய உரையை கேளுங்கள்” என பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.


காங்கிரஸ் செய்தது தவறா?


சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரசுக்கு விண்வெளி ஆராய்ச்சியை காட்டிலும், அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய வேண்டியதே முதன்மையான பணியாக இருந்தது. அதற்கான திட்டங்களையே தொடர்ந்து முன்னெடுத்தது.


இதன் விளைவாகவே கடைசியாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2007-2009 காலகட்டத்தில் உலக நாடுகள் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், இந்தியா அதனால் பெரிய அளவிற்கு தாக்கத்தை எதிர்கொள்ளவில்லை. அந்த அளவிற்கு நாட்டின் அடிப்படை தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டு இருந்தன. இதனிடையே, கால ஓட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சியின் அவசியத்தை உணர்ந்து, 1962ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவின் கீழ் அமைக்கப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) தான் தற்போது இஸ்ரோ என அறியப்படுகிறது.


பாஜக மட்டுமே காரணமா?


இந்நிலையில் தான், 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தபோது இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளை  மேம்படுத்துவதோடு, சர்வதேச அளவிலான விவகாரங்களிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாக இருந்தது. அதனை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி விண்வெளி ஆராய்ச்சி, தற்சார்பை கடந்து பொருட்களின் ஏற்றுமதி போன்ற விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தினர். அதன் விளைவாக தான் சந்திரயான் 3 வெற்றி தற்போது சர்வதேச அளவில் இந்தியாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.


வெற்றி யாருக்கு சொந்தம்?


இப்படி இந்தியாவை ஆண்ட, ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு அரசுகளுமே இஸ்ரோவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன. இஸ்ரோ என்ற அமைப்பையும் அதற்கான உட்கட்டமைப்புகளையும் அன்று காங்கிரஸ் தான் உருவாக்கியது. அப்படி நடக்காவிட்டால் தற்போதையை அனைத்து சாதனைகளையும் வெறும் 9 ஆண்டுகளிலும் பாஜகவால் செய்திருக்க முடியுமா?


மாறி மாறி வந்த அனைத்து அரசுகளும் நாட்டின் அப்போதைய தேவையை உணர்ந்து செயல்பட்டதன் காரணமாக தான் இந்தியா தற்போது அனைத்து துறைகளிலும் ஒரு சீரான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேநேரம், இந்த சந்திரயான் 3-ன் வெற்றி என்பது இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு சொந்தமானதே தவிர, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் உரித்தானதும் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.