கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக கார்கில் விஜய் திவாஸ் விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 23வது கார்கில் விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை, இந்திய ராணுவத்தின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினார்.


அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பாபா அமர்நாத் இந்தியாவிலும் மா சாரதா சக்தி, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பாலும் உள்ளது. இது எப்படி சாத்தியம்? 


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது எப்படி தொடரும். சிவன் வடிவில் பாபா அமர்நாத் மட்டும் இந்தியாவில் இருக்கும் போது சாரதா சக்தி கட்டுப்பாட்டு பகுதியின் மறுபுறத்தில் இருப்பது எப்படி" என்றார்.


சாரதா பீடம் என்பது சரஸ்வதி கோயிலின் மீதமுள்ள இடிபாடுகளாகும். ஜம்முவில் நடந்த 'கார்கில் விஜய் திவாஸ்' நினைவேந்தல் விழாவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 


மேலும் பேசிய அவர், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில், லடாக்கில் இருந்த நமது பகுதியை 1962ஆம் ஆண்டு சீனா கைப்பற்றியதை விட இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. 1962 இல் லடாக்கில் உள்ள எங்கள் பகுதியை சீனா கைப்பற்றியது, அப்போது, நேரு நமது பிரதமராக இருந்தார். அவருடைய நோக்கத்தை நான் கேள்வி கேட்க மாட்டேன். 


நோக்கங்கள் நல்லதாக இருக்கலாம் ஆனால் கொள்கைகளுக்கு இது பொருந்தாது. இருப்பினும், இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்வோம். நமது ராணுவம் எப்போதும் நாட்டிற்காக இந்த உயர்ந்த தியாகத்தை செய்துள்ளது. 1999 போரில் நமது வீரம் மிக்க வீரர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்" என்றார்.


ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தை நினைவுகூரும் வகையில், லடாக்கின் டிராஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் 23வது கார்கில் விஜய் திவாஸ் கொண்டாட இந்திய ராணுவம் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், கார்கில் போர் வீரர்கள் மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் உறவினர்கள் பங்கேற்க உள்ளனர்.


கார்கில் போர் மே 8, 1999 முதல் ஜூலை 26, 1999 வரை, பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. அவர்கள் 1998 குளிர்காலத்தில் இந்திய எல்லைக்குள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக அத்துமீறி நுழைந்து கார்கிலின் ட்ராஸ் மற்றும் படாலிக் ட்ராஸ் NH 1A பகுதிகளை ஆக்கிரமித்தனர்.