நொய்டா விமான நிலையம் முதல் நொய்டா பிலிம் சிட்டி வரை இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி சேவை இயங்கவிருக்கிறது.  


இதற்கான, விரிவான திட்ட அறிக்கையை இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட், யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்திடம், 2021 ஜூன் 13 அன்று சமர்ப்பித்தது. மேற்கத்திய நாடுகளில் பாட் டாக்ஸி சேவை மிகவும் பிரபலமான ஒன்று. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீடித்துவரும் மாசுகளை கட்டுப்படுத்துவதின் அவசியத்தை கருதி மெட்ரோ, பாட் டாக்ஸி போன்ற திறமைமிக்க போக்குவரத்து அமைப்பை உருவாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்தியாவில்,  சில வருடங்களுக்கு முன்பே, பாட் டாக்சி சேவை குறித்து  பேசப்பட்டது. இருப்பினும், நகர்ப்புர வடிவமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்கள், பட்ஜெட், பாதுகாப்பு  போன்ற காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.   


யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரி இதுகுறித்து கூறுகையில், " இன்றைய நகர்ப்புற போக்குவரத்தில் உள்ள முக்கிய சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிலிம் சிட்டியில் இருந்து நொய்டா சர்வதேச விமான நிலையத்தை எளிதாக அணுகக் கூடிய மற்றும் வசதியான போக்குவரத்தை இது வழங்கும்.  திட்ட அறிக்கையை ஆய்வு செய்து வருகிறோம். பின்னர் ஒப்புதலுக்காக உ.பி. அரசுக்கு அனுப்பப்படும்" என்று தெரிவித்தார். 






பாட் டாக்சி சேவை என்றால் என்ன?   


பாட் டாக்சி என்பது தனிப்பட்ட விரைவான போக்குவரத்து முறையாகும். போக்குவரத்து நெரிசல் ஏற்பாடாத வாறு, சாலை  உயரத்தில் உள்ள ட்ராக்கில், தொங்கியவாறு ‘pod’கள் பயணிக்கும்.  pod ஒன்றில்  குறைந்தது ஆறு பேர் வரை பயணம் செய்யலாம். . சூரிய சக்தியிலும் இதை இயக்கலாம் என்பதால் எரிபொருள் பிரச்னையும் ஏற்படாது என்று ஆய்வளார்கள் தெரிவிக்கின்றனர்.




இந்தியாவில் கார்பன் வெளியேற்றம், மாசு குறைபாடு இல்லாத போக்குவரத்தை உருவாக்க  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014-ஆம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் இருந்தது. இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் 25-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த (1700 கி.மீ தூரமாக ) உள்ளதாக மத்திய அரசு முன்னதாக தெரிவித்தது.  மெட்ரோ ரயில் சேவையை விட இது விரைவானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.