உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ளது கான்பூர் டெகத் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது துர்காதஸ்பூர் கிராமமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சிவம் யாதவ். அவரது மனைவி ஆர்த்தி யாதவ், இந்த நிலையில், நேற்று சிவம் யாதவ் நண்பர்களுடன் சூதாடிக்கொண்டிருந்தார். தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவம் யாதவை பிடித்துள்ளனர்.
அப்போது, யாதவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவிடாமல் யாதவின் மனைவி ஆர்த்தி யாதவும், அவரது தாயாரும் போலீசாரையும் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, காவல் உதவி ஆய்வாளர் மகேந்திர படேலுக்கும், ஆர்த்தி யாதவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, ஆர்த்தி யாதவிற்கும் மகேந்திர படேலுக்கும் நடைபெற்ற மோதலில் ஆர்த்தி யாதவ் கீழே விழுந்தபோது, அவர் மேல் ஏறி அமர்ந்து மகேந்திர படேல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்த்தி யாதவ் கூறும்போது, யாதவை விடுவிப்பதற்கு காவல் உதவி ஆய்வாளர் மகேந்திர படேல் பணம் கேட்டார். அதை கொடுக்க மறுத்த காரணத்தினால், மகேந்திர படேல் என்னை தரதரவென்று இழுத்துச் சென்று கீழே தள்ளவிட்டார். பின்னர், என் மேல் ஏறி அமர்ந்து என்னை மிகவும் மோசமாக தாக்கினார். பின்னர், கிராமத்தினர் உள்ளே புகுந்து என்னை காப்பாற்றினர் என்று கூறினார்.
இதுதொடர்பாக, காவல்துறையினரின் தரப்பில் கூறும்போது அந்த புகைப்படம் ஆர்த்தி யாதவிற்கும், காவல்துறையினருக்கும் நடந்த சண்டையின்போது தவறி கீழே விழுந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறியுள்ளனர். மேலும், சிவம் யாதவின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டை மறுத்த காவல்துறையினர் பஞ்சாயத்து தேர்தலின்போது அவர்கள் காவல்துறையினரை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்று கான்பூர் டெகாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.