பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மும்பைக்கு சென்றிருந்தார். அவரை வரவேற்பதற்காக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்பட பல அமைச்சர்கள் சென்றிருந்தனர். அப்போது, பிரதமரை வரவேற்பதற்கான விஐபி பட்டியலில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இடம்பெறவில்லை. 


எனவே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் காரில் பயணம் செய்யக் கூடாது எனக் கூறி அவரை காரிலிருந்து பிரதமரின் பாதுகாப்பு அலுவலர்கள் வெளியேற்றினர். இது பெரும் சர்ச்சையை கிளப்ப உத்தவ் தாக்கரே அதிருப்தி தெரிவித்து பாதுகாப்பு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆதித்யா தனது மகன் மட்டும் இல்லை என்றும் அமைச்சராக உள்ளார் என உத்தவ் பாதுகாப்பு அலுவலர்களிடம் கூறியுள்ளார்.


இறுதியாக, ஆதித்யா உத்தவ் தாக்கரேவின் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், மும்பையில் உள்ள ராஜ்பவனில் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 'புரட்சியாளர்களின் கேலரி' அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.






 


கடந்த 2016ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அப்போதைய ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ் பதவி காலத்தில் ராஜ்பவன் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலகப் போருக்கு முந்தைய 13 பிரிட்டிஷ் கால பதுங்கு குழிகளின் நிலத்தடி வலையமைப்பில் இந்த கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த கேலரியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திர போராட்ட இயக்கத்தில் அவர்களின் பங்கு, சிற்பங்கள், அரிய புகைப்படங்கள், சுவரோவியங்கள், பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட பழங்குடியின புரட்சியாளர்களின் விவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிர ஆளுநரின் இல்லம் மற்றும் அலுவலகமான புதிதாக புனரமைக்கப்பட்ட 'ஜல் பூஷன்' கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண