கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சமீபத்தில் கன்னடத்தில் வெளியான ’777 சார்லி’ படம் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


777 சார்லி


சாண்டல்வுட் எனப்படும் கன்னட சினிமா உலகில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் '777 சார்லி'


கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று (ஜூன்.14) கண்டுகளித்தார்.


இதற்காக பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர். திரையரங்கில் பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நாய் - மனித உறவின் நுட்பம் 




சார்லி என்ற நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், நாய் சார்லி வரும் காட்சிகளைப் பார்த்து, சமீபத்தில் இறந்து போன தன் வளர்ப்பு நாய் தியாவை நினைத்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.




மேலும், நாய் - மனிதன் இடையேயான உறவு மிகவும் நுட்பமாக இப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொம்மை கூறினார்.


தெரு நாய்களுக்கான திட்டம் தொடங்கப்படும்...


மேலும், படத்தின் டிரெய்லரை பார்த்தபோதே, இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று தான் விரும்பியதாகக் கூறிய பசவராஜ் பொம்மை, படத்தில் விலங்குகளுடன் பழகுவது குறித்த நல்ல செய்தி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


 






தவிர, கர்நாடகாவில் தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்தப்போவதாகவும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


ரக்‌ஷித் ஷெட்டி படம்


கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில், இயக்குநர் கிரண் ராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் '777 சார்லி'. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.


நாய் ஒன்றுக்கும், உறவுகளற்ற ஒரு இளைஞனுக்கும் இருக்கும் உறவை பறைசாற்றும் வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


குறிப்பாகப் படத்தை திரைப் பிரபலங்கள், திரைத்துறை விமர்சகர்கள் எனப் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.