நாடு முழுவதும் உள்ள மக்களை அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் தூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு என்றும்,  இதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் மதிப்புமிக்கது என்றும் கூறினார். அதாவது இது தொடர்பாக டிவிட்டர் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,  "அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நாங்கள் ஒரு முக்கிய தூய்மை முயற்சிக்காக ஒன்று கூடுகிறோம். ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு, மேலும் ஒவ்வொரு முயற்சியும் மதிப்புள்ளது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் சேருங்கள்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 


முன்னதாக, மன் கி பாத் நிகழ்ச்சியின் 105வது எபிசோடின் போது, ​​பிரதமர் மோடி, "அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை குறித்த பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்களும் நேரம் ஒதுக்கி, தூய்மை தொடர்பான பிரச்சாரத்திற்கு உதவுங்கள். உங்கள் தெரு, அல்லது சுற்றுப்புறம் அல்லது பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் இந்தத் தூய்மைப் பிரச்சாரத்தில் நீங்கள் சேரலாம்." 'ஏக் தரீக், ஏக் கண்டா, ஏக் சாத்' பிரச்சாரம் என்பது காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தைக் குறிக்கும் மிகப்பெரிய தூய்மை இயக்கமாகும். இந்த முன்முயற்சியானது 'ஸ்வச்சதா பக்வாடா- ஸ்வச்சதா ஹி சேவா' 2023 பிரச்சாரத்தின் முன்னோடி எனவும் பார்க்கப்படுகிறது. 









ஒவ்வொரு நகரமும், கிராமப் பஞ்சாயத்தும், சிவில் விமானப் போக்குவரத்து, ரயில்வே மற்றும் பொது நிறுவனங்கள் என அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும் குடிமக்கள் தலைமையில் தூய்மை நிகழ்வுகளை நடத்தும். பல்வேறு நிகழ்வுகளை பதிவிடுவதற்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு போர்டல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலில் அக்டோபர் 1ஆம் தேதி மக்கள்ம் தாங்கள் பங்குபெறும் நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை போர்ட்டலில் பதிவேற்றலாம்.

 

ஸ்வச் பாரத் மிஷன் அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது, இது நாட்டை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மற்றும் உலகளாவிய சுகாதார நாடாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததும் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்பட்டது.