காவிரி விவகாரத்தால் தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம், பல ஆண்டுகளாக பிரச்னையாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தராமல் இழுத்து அடித்து வருகிறது. 


விஸ்வரூபம் எடுத்த காவிரி விவகாரம்:


கர்நாடக அணைகளில் இருந்து வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை, 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதற்கு கன்னட அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 


இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படியான சூழலில் நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பை சார்ந்தவர்கள் பிரச்னை செய்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


பெங்களூருவில் சித்தா படத்தின் ப்ரமோஷன் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர்  மேடையில் அமர்ந்திருந்த சித்தார்த்தை நோக்கி கன்னடத்தில் ஏதோ கூறினர். நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். சித்தார்த்தை வெளியே செல்லுமாறும் வலியுறுத்தினர்.


சித்தார்த்தை மிரட்டிய கன்னட அமைப்புகள்:


தொடர்ந்து சித்தார்த்தை மிரட்டும் தொனியில் பேசியதால் அவர்  மேடையில் இருந்து எதுவும் பதில் பேசாமல் சிரித்துக்கொண்டே பாதியிலே இறங்கிச் சென்றார். இப்படியான சூழலில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், சித்தார்த்திற்கு நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.


பிரச்னையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, சாமானியர்களையும் கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எக்ஸ் வலைதளத்தில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டார்.


பிரகாஷ்ராஜ் கன்னடத்தில் போட்ட பதிவால் சர்ச்சை:


மிரட்டல் விடுத்த கன்னட அமைப்புகளின் சார்பாக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே பிரகாஷ்ராஜ் போட்ட மற்றோர் பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. சித்தார்த் விவகாரம் தொடர்பாக, பிரகாஷ்ராஜ் இரண்டு பதிவு போட்டிருந்தார்.


பிரகாஷ்ராஜ், ஆங்கிலத்தில் போட்ட பதிவுக்கும் கன்னடத்தில் போட்ட பதிவுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. கன்னடத்தில் போட்ட பதிவில், "காவிரி நம்முடையது" என்ற ஹேஷ்டேக்குடன் பிரகாஷ்ராஜ் பதிவிட்டிருந்தார். ஆனால், ஆங்கிலத்தில் போடும்போது, அந்த ஹேஷ்டேக் இல்லாமல் பதிவிட்டுள்ளார். இதனால், அவர் காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை கொண்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.