உலகில் வேகமாக செல்லக்கூடிய விமானங்கள், போர் விமானங்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விமானங்களின் பல்வேறு வகையான சாகசங்கள் உள்ளிட்ட கண்களையும் அறிவையும் ஆச்சர்யப்படுத்தும் பல தயாரிப்புகள், பெங்களூரு அருகே 5 நாட்கள் நடைபெறும் 14-வது ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் அறிமுகமும் தெளிமுகமும் ஆக இருக்கின்றன. வான்வெளியின் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் முதல் இன்றைய தயாரிப்பு வரை அனைத்தும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.



தொடங்கி வைக்கும் பிரதமர்:


வரும் திங்கட்கிழமை பெங்களுருவை அடுத்த ஏலங்காவில் நடைபெற இருக்கும் இந்த விமான மற்றும் பாதுகாப்பு கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். உள்நாட்டு மற்றும் பல வெளிநாடு விவிஐபி-க்கள் இந்த கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். வரும் 13- ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி தயாரிப்பு கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான திறவுகோல்:


ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை என்ற கருப்பொருளுடன் ஏரோ இந்தியா 2023 என்ற விமான கண்காட்சி பெங்களுருவை அடுத்த ஏலங்காவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில், “மேக் இன் இந்தியா - மேக் ஃபார் தி வேர்ல்ட்” என்ற பிரதமரின்  அழைப்பிற்கேற்ப பல அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. வெளிநாடுகளைச் சேர்ந்த 100 அரங்குகள் மற்றும் இந்தியாவிலிருந்து 700 அரங்குகள் என மொத்தம் 800 அரங்குகள் இந்தக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.


அசத்த இருக்கும் படைப்புகள்:


இந்த அரங்குகளில், உள்நாட்டு தயாரிப்புகள், உள்நாட்டு விமான தொழில்நுட்பங்கள், வெளிநாட்டு நிறுவனத் தயாரிப்புகள், தற்போது பிரபலமாக இருக்கும் தொழில்நுட்பங்கள், உள்நாடு – வெளிநாடு கூட்டுறவில் உருவாக இருக்கும் ஒப்பந்தங்களின் வெளியீடுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.


இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் சிறப்பு தயாரிப்புகளான ஆளில்லாத விமானங்கள், இலகு ரக போர்விமானம், தேஜாஸ் வகை போர்விமானங்கள், டோர்னியர் வகை விமானங்கள், பல்வேறு வகைகளிலான ஹெலிகாப்டர்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமின்றி, 60-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு விமான தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறப்போகின்றன.


தொழில்முனைவோருக்கு பெரும் வாய்ப்பு:


சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் விதமாக நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக ஏரோ இந்தியா 2023 கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 


பங்கேற்க இருக்கும் விவிஐபி-கள்:


பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் இந்தக் கண்காட்சியில், 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பது சிறப்பம்சம். அதுமட்டும் இல்லாமல், 30 நாடுகளின் அமைச்சர்கள், வெளிநாடுகளின் பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த 65 தலைமை செயல் அதிகாரிகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, போயிங், ஏர்பஸ், டசால்ட் ஏவியேஷன், இஸ்ரேல் ஏரோபேஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் முழு அளவில் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கண்காட்சியில், நமது நாடு மட்டுமல்ல, சர்வதேச அளவில் விண் பாதுகாப்புத்துறையில் உள்ள முக்கிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்புத்திறன்கள் ஆகியவற்றை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்படும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏபிபி நாடு-விற்கு அளித்த தகவல் பரிமாற்றத்தின் போது தெரிவித்தனர். 


உச்சகட்ட பாதுகாப்பு:


பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இந்த ஏரோ  இந்தியா கண்காட்சி நடைபெறுவது வழக்கம்தான் என்றாலும், கோவிட் அலைகளுக்குப் பிறகு நடைபெறும் பெரிய அளவிலான வான்வெளி தொடர்பான கண்காட்சி என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.