ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரௌபதி முர்மு, கடந்தாண்டு ஜூலை மாதம், நாட்டின் குடியரசு தலைவராக பதவியேற்றார். பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரிப்பது இதுவே முதல்முறை.


பிரதிபா பாட்டிலை அடுத்து இரண்டாவது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையும் இவரையே சாரும். இந்நிலையில், தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு இரண்டு நாள் பயணமாக முர்மு சென்றுள்ளார்.


தொண்டு நிறுவனமான ஞானபிரபா மிஷன் ஏற்பாடு செய்திருந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உளைச்சலை எதிர்கொண்டபோது யோகா தனக்கு உதவிகரமாக இருந்தது என்றும் அதை தினமும் பயற்சியாக எடுத்து கொண்டால் வாழ்க்கையின் அனைத்து முனைகளிலும் வெற்றியை அடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


விரிவாக பேசிய அவர், "ஒரு கட்டத்தில், நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முற்றிலும் உடைந்து யோகாவில் இறங்கினேன். நான் இன்று இங்கே உங்கள் முன் நின்று உங்களிடம் பேசுவது யோகாவினால் தான். உடலையும் மனதையும் நன்றாக வைத்துக்கொண்டு பெரிய இலக்கை அடைய அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


ஆன்மாவிற்கும் தெய்வீகத்திற்கும் இடையிலான இணைப்பாக யோகா செயல்படுகிறது. உடல், மனம் மற்றும் ஆன்மாவை தூய்மைப்படுத்தவும், ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும் ஒருவர் பாடுபட வேண்டும். 


மனிதர்கள் வாழ்வதற்கு பணம் மற்றும் பிற பொருட்கள் தேவை என்றாலும், ஒருவர் பொருள்சார்ந்த விஷயங்களுக்குப் பின்னால் ஓடக்கூடாது, மாறாக அறிவை அடைய முயல வேண்டும். ஆன்மீக விழிப்புணர்வில் கவனம் செலுத்த வேண்டும். அது அவரை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்ல உதவும்.


யோகாவின் முக்கியத்துவத்தை உலகமே இப்போது உணர்ந்திருப்பது இந்தியாவின் முயற்சியால்தான். எல்லா மதத்தினரும் பெற்றோருக்கும் முதியவர்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள்.


இதுவே தர்மத்தின் சாரம். பெற்றோரின் புகைப்படங்களுக்கு பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக அவர்களைக் கவனித்துக்கொள்வது மிகப் பெரிய வேலை.


முடிவில்லா தியாகத்திற்காக தாய்மார்களை குழந்தைகளிடத்தில் முதலிடத்தில் வைப்பது இந்திய மரபுகளும் கலாச்சாரங்களும். இன்றைய இளைஞர்கள் தங்களுக்காக வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த பெற்றோருக்கு போதுமான அன்பையும் அக்கறையையும் கொடுக்கிறார்களா என்று நாம் கேட்க வேண்டும்.


ஆன்மிகம், அரசியல், கல்வி அல்லது வேறு எந்தத் துறையாக இருந்தாலும், பெண்கள் அனைத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் மனிதர்களை உருவாக்குகிறார்கள். இந்த மனிதர்கள் ஒரு தேசத்தை வலிமையாக்குகிறார்கள்" என்றார்.


குடியரசு தலைவராவதற்கு முன்பு ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தவர் முர்மு. அதற்கு முன்பு வாழ்க்கையில் பல வேதனைகளை அவர் சந்தித்திருக்கிறார். மிக குறுகிய காலத்தில் இரண்டு மகன்கள், கணவர், சகோதரர் என அனைவரையும் பறி கொடுத்தவர் முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.