அமெரிக்க நாடாளுமன்றத்தின்  கூட்டுக் கூட்டத்தில் பிரதமர்  நரேந்திர மோடி உரையாற்ற உள்ள நிலையில், அவருடைய பேச்சு மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. 


ஜூன் 21 முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 20 ஆம் தேதி காலையில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்திய நேரப்படி அன்றைய தினத்தின் நள்ளிரவில் அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க வாழ் இந்திய மக்களும் பிரதமர் மோடியின் பயணத்தை கொண்டாடி வருகின்றனர். 


இதனிடையே நேற்றைய தினம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த பிரமாண்டமான நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்த யோகா நிகழ்வில் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், யோகா ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என 180 நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். 


இதனைத் தொடர்ந்து  வாஷிங்டன் சென்றடைந்த பிரதமருக்கு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வர்ஜீனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் ஜில் பைடனை சந்தித்தார். இதனையடுத்து  மோடி வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். 


வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இசை மற்றும் நடனத்தையும், விருந்திலும் பங்கேற்றார். இதன்பின்னர் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய புத்தகங்கள் மற்றும் கேமரவை அதிபர் ஜோ பைடன் பரிசளித்தார். இந்நிலையில் இன்று மாலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடியில் பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அவர் தனது உரையில், இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை குறித்தும், இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் குறித்தும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற போது நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றியிருந்த பிரதமர் மோடி, தற்போது 2வது முறையாக உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.