அமுல் என்றால் தெரியாத நபர்களே இருக்க முடியாது. 80 மற்றும் 90 ஆண்டுகளில் வந்த அமுல் விளம்பரத்தை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக அந்த விளம்பரங்களில் வரக்கூடிய கார்ட்டூன் சிறுமி (அமுல் கேர்ள்) மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அந்த கார்ட்டூன் சிறுமியை பார்ப்பதற்காகவே விளம்பரத்தை பார்த்தவர்கள் ஏராளம்.
அமுல் கேர்ள் சின்னத்தைப் பயன்படுத்தி விளம்பரங்கள் 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விளம்பர நிறுவனமான ஏஎஸ்பியின் நிர்வாக இயக்குநராக இருந்த சில்வெஸ்டர் டகுன்ஹா மற்றும் அதன் கலை இயக்குநரான யூஸ்டேஸ் பெர்னாண்டஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட பின்னர் 1966 இல் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டன. அமுல் கேர்ள் படத்தை உருவாக்கிய சில்வெஸ்டர் டகுன்ஹா ஜூன் 20 அன்று மும்பையில் காலமானார். விளம்பர துறையின் ஜாம்பவான் என அழைக்கப்படு டகுன்ஹாவின் மறைவு பலருக்கும் வருத்தமளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.
போல்கா-புள்ளியிடப்பட்ட ஃபிராக், நீல நிற முடி மற்றும் பிங் நிற கன்னங்கள் ஆகியவற்றுடன் வீட்டுப் பெயராக மாறியிருக்கும் சின்னம் தான் இந்த அமுல் கேர்ள். அமுலின் இந்தியா 3.0 வில் சில்வெஸ்டர் டகுன்ஹா தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தக்கூடிய ஒரு சின்னத்தை உருவாக்க விரும்பினார். அப்போது தான் ஒரு குழந்தை பிராண்டின் முகமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அமுல் கேர்ள் உயிர்ப்பித்த யூஸ்டேஸ் பெர்னாண்டஸிடம் சில்வெஸ்டர் டகுன்ஹா தனது காட்சிப்படுத்தலை விளக்கினார். அதனடிப்படையில் தான் அமுல் கேர்ள் வடிவமைக்கப்பட்டது. விளம்பரத்தில் "utterly butterly delicious" என்ற கேட்ச் ஃபிரேஸை சில்வெஸ்டரின் மனைவி நிஷா டா குன்ஹா உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அமுல் நிர்வாக இயக்குனர் தனது டிவிட்டர் பதிவில், “ அவரது மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். விளம்பர் உலகின் புதிய உச்சத்தை அடைந்த அமுல், பல தலைமுறைகள் கடந்தும் அமுலின் புகழும் அடையாளமும் இன்றளவும் மாறாமல் உள்ளது.