பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் ஆகியோரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். 

Continues below advertisement

முசாவிர் ஹூசைன் ஷாஜிப்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்தவர். அப்துல் மதீன் தாஹா குண்டுவெடிப்பைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிரடியாக நடந்த கைது நடவடிக்கை: 

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு நாட்டையே உலுக்கியது. இந்த குண்டுவெடிப்பில் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் முக்கிய குற்றவாளி என்றும், அப்துல் மதின் தாஹா சதி செய்தவர் என்றும் என்.ஐ.ஏ சமீபத்தில் அடையாளம் கண்டது. இதையடுத்து, தலைமறைவான இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்காக கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. 

Continues below advertisement

அப்போது, இந்த முக்கிய குற்றவாளிகளுக்கு உதவிய சிக்கமகளூரை அடுத்த கல்சாவை சேர்ந்த முஸம்மில் ஷெரீப் என்பவரை கடந்த மார்ச் 26ம் தேதி என்.ஐ.ஏ கைது செய்தது. போலீஸ் காவலில் இருந்த ஷெரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த மார்ச் 29ம் தேதி தலைமறைவான இரண்டு குற்றவாளிகளுக்கு குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்தது. 

இந்தநிலையில், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று கொல்கத்தாவில் அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப்பை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் வசித்து வந்தவர்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, இருவரும்  பெங்களூருவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு தப்பி சென்றுவிட்டனர். 

மீண்டும் திறக்கப்பட்ட ராமேஸ்வரம் கஃபே: 

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஹோட்டலில் மார்ச் 1ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். ஹோட்டலில் டைமரைப் பயன்படுத்தி ஐஇடி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குண்டுவெடிப்புக்குப் பிறகு, மஹாசிவராத்திரி அன்று ராமேஸ்வரம் கஃபே மிகவும் உற்சாகத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது. இது குறித்து கஃபே நிர்வாகம் கூறுகையில், ”ஹோட்டலின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களை பரிசோதிக்க மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணியாளர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் கையடக்க டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்வார்கள். அனைத்து வாடிக்கையாளர்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள்.  சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் இருந்தால் பணியாளர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள்” என்று தெரிவித்தது.