விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, இன்று ( ஜனவரி 12ஆம் தேதி ) கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில்  நடைபெற்ற தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.


இவ்விழா நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி வந்து கொண்டிருந்த போது, காரில் ஓரத்தில் நின்றபடியே பொதுமக்களுக்கு கை அசைத்து கொண்டு வந்தர். அப்போது, சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், பிரதமருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை மீறி, கையில் மாலையுடன் திடீரென மோடியின் அருகே வந்தார். 


இதை பார்த்த காவலர்கள் உடனடியாக சுதாரித்து, அவரை பிடித்து, சாலையின் ஓரத்தில் கொண்டு சென்றனர்.


மாலையை வாங்கிய பிரதமர்.


மாலையுடன் வந்த நபரிடமிருந்து மாலையை பாதுகாப்பு பிரிவினர் பிடுங்கினர். ஆனால், அதை காவலரிடம் இருந்து பிரதமர் மோடி வாங்கி காரினுள் வைத்து கொண்டார்.


பாதுகாப்பு மீறல் எப்படி:


பிரதமருக்கு  SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பிரதமர் எங்கு சென்றாலும் அவருக்கு எந்தவித பாதிப்பும் நிகழாத வகையில், பாதுகாப்பு அளிப்பது, இவர்களின் கடமையாகும்.


மாநில காவல்துறை மற்றும் எஸ்.பி.ஜி. ஆகியோரின் பாதுகாப்பு இருந்து போதும் , ஒரு நபர் எப்படி பிரதமரின் அருகே மாலையுடன் வந்தார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





மேலும், இதுபோன்ற நிகழ்வானது பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்டுள்ளதோ என்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.