காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் எனும் பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த பயணம் 117 நாட்களை கடந்துள்ளது. இந்த பயணத்தின் போது பொதுமக்களை சந்திப்பதோடு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, பாஜகவையும், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இதனால், பல அரசியல் சர்ச்சைகளும் அவ்வப்போது எழுந்து வருகின்றன.


தங்கைக்கு முத்தமிட்ட ராகுல்காந்தி:


இந்நிலையில், தனது நடைபயணத்தின் ஒருபகுதியாக, உத்தரபிரதேசம் மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, காசியாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அவரது தங்கையும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.






ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, தனது தங்கைக்கு அன்பு பொங்க வாஞ்சையுடன் ராகுல் காந்தி முத்தம் கொடுத்தார். இதனால் அகம் மகிழ்ந்து நெகிழ்ந்து போன பிரியங்கா காந்தி, மேடையில் மகிழ்ச்சி பொங்க புன்னகைத்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலானது. அதோடு, மகாபாரதத்தில் கவுரவர்களும், பாண்டவர்களும் போரிட்ட மாநிலம் உத்தரபிரதேசம், 21-ம் நூற்றாண்டின் கவுரவர்களை பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர்கள் காக்கி நிறத்தில் அரைக்கால் சட்டை அணிந்து, கையில் லத்தி ஏந்தி இருப்பார்கள் என, ஆர்எஸ்எஸ் அமைப்பை ராகுல் காந்தி சாடியிருந்தார்.


கடுமையாக விமர்சித்த பாஜக அமைச்சர்:


இதற்கு உத்தரபிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து பதிலளித்துள்ளார்.  அதில், ”ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கவுரவர்கள் என்றால், ராகுல் காந்தி பாண்டவாரா?.. எந்த பாண்டாவராவது தனது தங்கையை ராகுல் காந்தியை போன்று பொது இடத்தில் முத்தமிடுவாரா?. இது நமது கலாச்சாரம் கிடையாது. இதுபோன்ற செயல்களுக்கு இந்திய கலாசாரம் அனுமதி கொடுப்பது இல்லை. ரேபரேலியில் இருந்து வெளியேறும் கடைசி வெளிநாட்டவராக சோனியா காந்தி இருப்பார். ஆங்கிலேயர்களை விரட்டி சுதந்திரம் பெற நாம் கடுமையாக போராடினோம். எனவே, எந்த ஒரு வெளிநாட்டினரையும் தங்கள் ஆட்சியாளராக இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சங்க பிரசாரகர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு எந்த பேராசையும் இன்றி தேசத்தை கட்டமைக்க தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்” என உத்தரபிரதேச அமைச்சர் பதிலளித்துள்ளார்.


ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு பாசத்துடன் முத்தம் கொடுத்ததைக் கூட, தவறான பார்வையில் விமர்சித்த உத்தரபிரதேச அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.