காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தலைவரிடமிருந்து வெளிப்படையான ஆதரவு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். 


 


 பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்தது மட்டும் இல்லாமல் அவரைப் பாராட்டினார். அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தபோதும் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். 


அவர்களுக்கு ஏன் ஆதரவு?


இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, “பாஜகவை எதிர்ப்பவர்களை மட்டும் எப்படி அவர்களுக்கு (பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு) பிடிக்கின்றது, அவர்களுக்கு மட்டும் எதனால் இந்த ஆதரவு கிடைக்கின்றது. இது கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் அரசியல் தெளிவுடைய வாக்காளர்கள். இவர்களிடையே வெளிநாடுகளில் இருப்பவரிகளின் அறிக்கைகள் எந்தவகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் மட்டும் இல்லாமல் இந்தியாவின் ஜனநாயகமே மிகவும் முதிர்ச்சி அடைந்தது. இந்திய வாக்காளர்களும் அவ்வாறுதான். இவர்களை வெளிப்புற காரணங்கள் எந்தவகையிலும் பாதிக்காது” எனக் கூறினார். 


பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஆதரவு:


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். இதனை பாஜகவினர் ராகுல் காந்திக்கு எதிரி நாடான பாகிஸ்தானில் இருந்து ஆதரவு உள்ளது எனக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டனர்.


இதுமட்டும் இல்லாமல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் உச்சநீதிமன்றம் வழங்கியதும் தனது எக்ஸ் பக்கத்தில் தம்ஸ் அப் பதிவைப் போட்டார். இத்துடன், ”மோடி அரசுக்கு மற்றொரு பின்னடைவு, கெஜ்ரிவால் ரிலீஸ் செய்யப்படுகின்றார்” என பதிவிட்டிருந்தார். மேலும், கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குச் சாவடியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "அமைதியும் நல்லிணக்கமும் வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்” என குறிப்பிட்டுருந்தார். 


இந்த பதிவுக்கு, கெஜ்ரிவால் தரப்பில் இருந்து மிகவும் காட்டமான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், “சௌத்ரி சாஹிப், நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்சனைகளை தீர்க்க நாங்கள் திறமையானவர்கள். உங்கள் ட்வீட் எங்களுக்கு தேவையில்லை. தற்போது, ​​பாகிஸ்தான் மோசமான நிலையில் உள்ளது. உங்கள் சொந்த நாட்டை நீங்கள் கவனியுங்கள்” என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.