வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வீசிய கடுமையான ரெமல் புயல் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


கரையை கடந்த புயல்:


ரெமல் புயலானது, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியதாகவும், திங்கள் கிழமை அதிகாலை மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷின் கடற்கரைகளுக்கு இடையே  கரையை கடந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாகர் தீவுக்கும், அண்டை நாட்டில் மோங்லாவுக்கும் இடையில் கரையை கடந்தது.


தீவிர புயலானது,  திங்கள் கிழமை அதிகாலை 12:30 மணியளவில் வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையோரப் பகுதியைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


ரெமல் புயல், நேற்று இரவு முதல் கரையை கடக்க தொடங்கி திங்கள்கிழமை காலை வரையிலான நேரத்துக்கு  இடையில் கரையை கடந்து வலுவிழந்தது. புயல் கரையை கடந்த போது காற்றின் வேகமானது சுமார் 135 கிலோமீட்டர் வேகம் வரை இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






தற்போது எப்படி?


புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் இன்று முழுவதும் நீடிக்கும் என வானிலை தெரிவித்துள்ளது. தெற்கு வங்காளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நாளை முதல் வானிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






பாதிப்பு:  


பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன.


மின்கம்பங்கள் சரிந்தன.


சில குடியிருப்புகளும் தரைமட்டமாகின.


சூறாவளி காரணமாக சுமார் 2,00,000 பேர் மாற்று இடத்துக்கு இடம்பெயர்ந்தனர்.


புயல் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.


கொல்கத்தாவின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.  






மேற்கு வங்கம் மாநிலம் மட்டுமன்றி, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும் பாதிப்புக்குள்ளாகின.


ரயில், விமான சேவை பாதிப்பு:


கொல்கத்தா விமான நிலையம் 21 மணிநேரங்களுக்கு விமானச் செயல்பாடுகளை நிறுத்தியதால், 394 விமானங்கள் பறக்கவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.  தற்போது, கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.   


ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்தில் கணிசமான இடையூறுகள் ஏற்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் நாளைதான் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.