நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய தேர்தலில் பொதுமக்கள் தங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி: தொடர்ந்து பேசிய அவர், "சிலரது வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து பொய்களை பரப்பிய போதும் பெரும் தோல்வியை சந்தித்தனர்" என எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம் வைத்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அவர், "நேற்றும் இன்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் உரை குறித்து தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக முதன்முறையாக வந்தவர்கள். அவர்கள் நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றினர். அவர்களின் நடத்தை, அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினரைப் போல இருந்தது.
"நாட்டை கரையான் போல நாசமாக்கிய ஊழல்" அவர்கள் முதல் முறை எம்பிக்களாக இருந்தபோதிலும், அவர்கள் சபையின் கண்ணியத்தை உயர்த்தியுள்ளனர். அவர்களின் கருத்துக்களால் இந்த விவாதத்தை மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்கியுள்ளனர். நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் தனது உரையில் விக்சித்பாரத் (வளர்ந்த பாரதம்) குறித்து விரிவாக பேசினார்.
முக்கியமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். நம் அனைவரையும், நாட்டையும் வழிநடத்தியுள்ளார். இதற்காக குடியரசுத் தலைவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உலகின் மிகப்பெரிய தேர்தல்.
இதில் இந்திய மக்கள் மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்துள்ளனர். இது ஜனநாயக உலகிற்கு மிக முக்கியமான நிகழ்வு. மிகவும் பெருமையான நிகழ்வு. 2014ஆம் ஆண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழலைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியிருந்தோம்.
ஊழல், நாட்டை கரையான் போல நாசமாக்கியது. இருப்பினும், ஊழலை பொறுத்துக்கொள்ளாமல் அணுகியதற்காக நாட்டு மக்கள் எங்களை ஆசீர்வதித்துள்ளனர். 2014க்கு பிறகு, கொள்கைகளில் மாற்றங்கள் இருந்தன. முடிவுகளில் வேகம் இருந்தன.
விசுவாசம் என்பது நம்பகத்தன்மையின் சாராம்சமாக மாறியது. அதன் விளைவுதான் இன்று உலகின் தலைசிறந்த வங்கிகளில் இந்தியாவில் உள்ளன. 2014 ஆம் ஆண்டின் அந்த நாட்களை நாம் நினைவு கூர்ந்தால், நம் நாட்டு மக்கள் தங்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதை உணரலாம். நாடு விரக்தியின் படுகுழியில் மூழ்கியது.
பயங்கரவாதிகள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து தாக்குதல் நடத்தும் காலம் இருந்தது. 2014க்கு முன், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் குறிவைக்கப்பட்டு, வாய் திறக்கக் கூடத் தயாராக இல்லாமல் அரசுகள் அமைதியாக உட்கார்ந்திருந்தன" என்றார்.