சமீப காலமாக, நீதிபதிகள் தெரிவிக்கும் சர்ச்சை கருத்துகள் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இளம் பெண்கள், பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


மதமாற்றம் குறித்து நீதிபதி சர்ச்சை கருத்து: இந்த நிலையில், மதமாற்றம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்களை நிறுத்த வேண்டும். இம்மாதிரியான கூட்டங்களை நடத்த அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


மதமாற்றத்திற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமிர்பூரில் இருந்து டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு மக்களை அழைத்துச் சென்றதாக கைலாஷ் என்பவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. பிணை கோரி கைலாஷ் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனு மீதான நேற்றைய விசாரணையின்போது, நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ராம்காலி பிரஜாபதியின் சகோதரர் ராம்பாலை டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார் கைலாஷ். ஆனால், மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரவே இல்லை.


"பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்" ராம்பால், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என கூறி கைலாஷ் அழைத்து சென்றுள்ளார். ராம்பால் திரும்பி வராததால், கைலாஷிடம் ராம்காலி கேட்டுள்ளார். ஆனால், திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.


ஹமிர்பூர் கிராமத்தில் இருந்து பலர் டெல்லி கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து, கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைலாஷ் கைது செய்யப்பட்டார். உ.பி., சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டம், 2021 இன் அவர் கீழ் கைது செய்யப்பட்டார்.


நேற்றைய விசாரணையில் உத்தர பிரதேச அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.கே.கிரி, "இத்தகைய கூட்டங்களில், ஏராளமான மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுகிறார்கள். மக்களை மதமாற்றம் செய்ய கிராமத்தில் இருந்து அழைத்துச் சென்றதாகவும், அதற்கு ஈடாக பணம் பெற்று தந்ததாகவும் சாட்சிகள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்" என்றார்.


வழக்கின் பின்னணி என்ன? இதையடுத்து வாதிட்ட கைலாஷ் தரப்பு வழக்கறிஞர் சாகேத் ஜெய்ஸ்வால், "கிறிஸ்தவ மதத்திற்கு ராம்பால் மாறவில்லை. ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். அத்தகைய கூட்டத்தை நடத்தியவர் சோனு பாஸ்டர். அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது" என்றார்


இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், "தார்மீக நம்பிக்கைகளை வைத்து கொள்ளவும் மதத்தை சுதந்திரமாக பரப்பவும், பின்பற்றவும், வெளிப்படுத்தி கொள்ளவும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 சுதந்திரம் வழங்குகிறது.


ஆனால், ஒரு நம்பிக்கையிலிருந்து (மதம்) மற்றொரு நம்பிக்கைக்கு (மதம்) மாறுவதற்கான சுதந்திரம் வழங்கப்படவில்லை. 'பிரசாரம்' என்ற வார்த்தைக்கு ஊக்குவிப்பது என்பதே பொருள். ஆனால், அது எந்த நபரையும் ஒரு மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாற்றலாம் என சொல்லவில்லை.


இம்மாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்கினால், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். எனவே, இதுபோன்ற மதக் கூட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.