மணிப்பூர் மக்கள்தொகையில் 51 சதவீதமாக இருப்பவர்கள் மெய்தி இன மக்கள். தலைநகர் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வசிக்கும் இந்த மெய்தி மக்ககளில் பெரும்பான்மையினர் இந்து மதத்தவர். குறைந்த அளவிலானோர் கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் உள்ளனர். அதேசமயத்தில் மலைப்பிரதேசங்களில் வசிக்கும் குக்கி சமூக மக்கள் பழங்குடியினர். இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.
மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான மெய்தி மக்கள், தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என கேட்டு வருகின்றனர். அதற்கு குக்கி சமூக மக்கள் தங்களது சலுகைகளும், நிலங்களும், வேலைவாய்ப்பும் பறிபோகும் என்ற அச்சத்தில் எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் மெய்தி மக்களுக்கு ஆதரவாக மணிப்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 2023 ஏப்ரலில் அதன் இணையதளத்தில் வெளியானபோது குக்கி இன மக்கள் அதிர்ந்தனர். அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மே மாதம் மெய்தி சமூக மக்களுக்கும், குக்கி சமூகத்தவருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக பரவியது.
மேலும், மெய்தி - குக்கி ஆயுதக்குழுக்களிடையிலான கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பல ஆயிரம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வெளியேறினர். பல குடும்பத் தலைவர்களும், இளைஞர்களும் உயிருக்கு அஞ்சி வேறு இடங்களில் வேதனையுடன் இன்றும் காலம் கழித்து வருகின்றனர்.
மணிப்பூரில் ராணுவம், துணை ராணுவமும் குவிக்கப்பட்டிருந்தாலும் வன்முறை குறையவில்லை. இந்த வன்முறையில் இதுவரை 221 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த 32 பேரைக் காணவில்லை என மெய்தி சமூகத்தவரும், 15 பேரைக் காணவில்லை என குக்கி சமூகத்தவரும் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் யாராலும் மறக்க முடியாத அளவிற்கு அமைந்தது.
ஆனால் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருப்பது எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.
மணிப்பூர் மாநிலம் இந்தியாவிற்கு முக்கியம் இல்லை - எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜம்
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை பா.ஜனதா எம் பி அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் ஆவேசமாக பதில் அளித்ததால், நாடாளுமன்றத்தில் விவாதம் அனல் பறந்தது.
மக்களவையில் மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் பேசியது.. மணிப்பூர் மக்களை முழுவதுமாக தனது உரையில் ஜனாதிபதி புறக்கணித்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் அவலங்கள் 1947 பிரிவினைபடி வன்முறைகளுக்குச் சமமானது. மக்கள் படும் துயரங்களை இந்த அவையில் சொல்லக் கூட முடியாது.
இவ்வளவு நடந்தும் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார். எங்கள் மாநிலம் இந்தியாவுக்கு முக்கியம் இல்லை என்பதுபோல மத்திய அரசு நடந்துகொள்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் இந்திய வரலாற்று புத்தகங்களில் இருந்து புறம்தள்ளப்படுகிறது என தெரிவித்தார்.