உலகின் பழமையான மொழி தமிழ்; ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். 


இதில் பேசிய பிரதமர் மோடி,” உலகின் பழமையான மொழி தமிழ்;  பல முறை சாதனை செய்த தமிழர்கள் குறித்து மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளேன்” என்று தெரிவித்தார். 


மேலும் ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை நினைவு கூர்ந்து நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். காசி தமிழ் சங்கமம் விழா குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். தமிழ் மொழியும், கலாச்சாரமும் அற்புதமானது என்பதையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாட்டம்:


தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, டெல்லியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஒவ்வொரு ஆண்டும் தனது இல்லத்தில் புத்தாண்டு விழாவை நடத்தி வருகிறார்.போலவே,  தமிழ் புத்தாண்டு நாளை (வெள்ளிக்கிழமை, 14, ஏப்ரல்) கொண்டாடப்படுவதையொட்டி, டெல்லி காமராஜ் லேன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த்து. அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டார்.




தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்ட்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையின் விவரம்:


உலகிலேயே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்டு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். 


வரலாற்றில் தமிழ் மொழியும்,கலாச்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் மொழி குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமையடைகின்றனர். தமிழ் சினிமா சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளது.


குஜராத் மாநிலத்தில் எம்.எல்.ஏ.ஆக இருந்த பொழுதுகள் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, “ நான் குஜராத் எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது, அங்கு நிறைய தமிழ் மக்கள் வசித்தனர். அவர்கள்தான் எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கினர்.குஜராத்தில் வாழ்ந்த தமிழர்கள் பழகிய நேரத்தை மறக்க மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.


இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியா உருவாவதற்கும்,அதன் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு அளப்பறியது. மருத்துவம், சட்டம்,கல்வி ஆகிய துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது என்று பாராட்டினார். 


”தமிழின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பது என் கடமை. அதற்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பு இது. ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைக்கையில் உலக தமிழர்கள் மகிழ்ந்ததை நான் அறிவேன். ” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.


ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் காலச்சாரம் இந்தியாவை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நாட்டின் பன்முக தன்மையை கொண்டாடுவதற்கான சான்று.


 உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியனும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுகின்றனர். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலமில் இருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் தம்முடன் சுமந்து சென்ற தமிழ் மக்களைக் காணலாம்.


பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன. பலமுறை பல சாதனை செய்த தமிழர்கள் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசி உள்ளேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கி உள்ளது.


இலங்கைக்குச் சென்றது குறித்து பிரதமர் கூறுகையில், “ஜாஃப்னா சென்ற முதல் இந்திய பிரதமர் நான். அங்குள்ள தமிழ் மக்களின் நலனிற்கு அரசு சார்பில் உதவி செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.  


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டார்.