அவதூறு வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம் தீரப்பை ஒத்திவைத்துள்ளது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி ராபின் மொகேரா, தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், வரும் ஏப்ரல் 20ஆம் தேதி, இந்த வழக்கில் உத்தரவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கு:
கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கூறியிருந்தார்.
ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி சார்பில் சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ராகுல் காந்தியின் சார்பாக, நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா மற்றும் வழக்கறிஞர்கள் கிரிட் பன்வாலா, தரன்னும் சீமா ஆகியோர் ஆஜராகினர்.
இன்றைய விசாரணையின்போது வாதிட்ட வழக்கறிஞர் சீமா, "அவதூறு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே புகார் அளிக்க முடியும். எனவே, பூர்ணேஷ் மோடி புகார் அளிக்க சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.
மோடி என்ற குடும்பப் பெயரை அவதூறு செய்யும் நோக்கம் பேச்சாளரிடம் இருந்ததா என்பதைக் கண்டறிய ராகுல் காந்தியின் உரையை சூழலுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சன ரீதியாக பேசியதன் விளைவு அன்றி வேறில்லை" என்றார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ராகுல் காந்தி:
பிரதமர் மோடிக்கு எதிராகவும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தி, அதானி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல, லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
லண்டனில் ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்திக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முடக்கினர். இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடிக்க கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வந்தது.