டிசம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி வருகை தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் புதிய பாலத்தை திறந்து வைக்க வருகை தருகிறார், மேலும் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் இரண்டாம்  ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொள்வார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடலின் குறுக்கே அமைந்துள்ள பாம்பன் பழைய தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் போக்குவரத்து சேவையை தென்னக ரயில்வே நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில்வே போக்குவரத்து பாதிப்படைய கூடாது என்பதற்காக புதிய ரயில்வே பாலம் கட்ட திட்டமிட்டு அதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தருகிறார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், இஸ்ரோ தமிழ்நாட்டில் இரண்டாவது தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தூதுக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 2,300 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமையவுள்ள நிலையில், இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் 99% முடிந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்த நிலமும் இப்போது இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையில் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ஏவுதளத்தில் முதலில் சிறிய வகை ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஏவுதளத்திற்கான பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்கள் இருந்தும் ஏன் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதாவது குலசேகரப்பட்டினத்திற்கு அண்டார்டிக்காவிற்கும் இடையே எந்த ஒரு நிலைமும் கிடையாது. மேலும் பூமத்திய ரேகைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இடம் என்பதால் நமக்கு எரிபொருள் செலவு குறையும். இதன் காரணமாகவே குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


படுக்கபத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமரபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கபத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.




இப்படி குலசேகரப்பட்டினத்தில் விண்வெஇ ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி வருகை தந்து அடிக்கல் நாட்டுவார் என அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.