துருக்கியின் தென்கிழக்கு மாகாணத்தில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்,  பிப்ரவரி 6 அதிகாலையில் தாக்கியது. அதைத் தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில்  ஏற்பட்டது. இதனால் கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கிக் கொண்டனர்.


பலர் காணவில்லை:


மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 46,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் உள்ள மூன்று லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் இடிந்து விழுந்தது, பலர் இன்னும் காணவில்லை.


”ஆபரேஷன் தோஸ்த்”


இந்நிலையில் பல்வேறு நாடுகள் துருக்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. நட்பு நாடான இந்தியாவும் ”ஆபரேஷன் தோஸ்த்” மூலம் மீட்பு உதவிகளை வழங்கியது. அதையடுத்து, நேற்று தனது மீட்பு பணியை முடித்து இந்திய மீட்புப்படை தாயகம் திரும்பியது. இதை அடுத்து தங்களுக்கு உதவி வழங்கியதற்காக இந்தியாவுக்கு துருக்கியைச் சேர்ந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.


இந்நிலையில், மீட்பு படையினருடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார், அப்போது பேசிய அவர், உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதுகிறோம். குடும்ப உறுப்பினர் ஒருவர் சிக்கலில் இருக்கும்போது, அதற்கு உதவுவது இந்தியாவின் கடமை.






இந்தியா உதவி :


எந்த நாடாக இருந்தாலும் சரி, அது மனிதநேயம் சார்ந்ததாக இருந்தால், இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. உடனே இந்தியா  எப்படி வந்தது என்பதை உலகமே வியக்கிறது. இது உங்கள் தயார்நிலையையும், உங்கள் பயிற்சி திறன்களையும் காட்டுகிறது. நமது தேசிய மீட்பு படை வீரர்கள் 10 நாட்கள், துருக்கியில் பணியாற்றிய விதம் பாராட்டுக்குரியது.


இன்று உலகில் இந்தியா மீது நல்லெண்ணம் உள்ளது. பேரழிவு ஏற்படும் போதெல்லாம், இந்தியா முதலில் வந்து உதவிகளை வழங்குகிறது. நேபாள பூகம்பம், மாலத்தீவு, இலங்கை நெருக்கடி என எதுவாக இருந்தாலும் முதலில் உதவ முன்வந்தது இந்தியாதான். இப்போது என்.டி.ஆர்.எஃப் மீதான மற்ற நாடுகளின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. உலகின் சிறந்த மீட்புக் குழுவாக, நமது அடையாளத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.






2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, நான் ஒரு தன்னார்வலராக உதவி செய்தேன், மக்களை மீட்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களை நான் பார்த்தேன் என பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்