Covid : கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, ”கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் நேற்று வரை 3,264 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த பாதிப்பானது அதிகரித்துள்ளது. மேலும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல் தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போது இருக்க சூழ்நிலையில் அவசியமானதாக உள்ளது” என்றார்.
மேலும், ”இதனை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மார்ச் 8ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, ”தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
”மேலும், "வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கட்டயாம் பரிசோதிக்க வேண்டும் எனவும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதிக கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்
கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருக்கவே, நாடு முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வானிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறைந்தபட்சம் ஒரு வாரம் நீடிக்கிறது. மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கிறது.
NCDC இன் தகவலின்படி, இந்த பாதிப்புகள் பெரும்பாலானவை H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.