டெல்லி துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா. இவர் ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சூழலில், இவருக்கு எதிராக மற்றொரு ஊழல் வழக்கை கையில் எடுத்துள்ளது சிபிஐ.
மீண்டும் சிக்கலில் சிசோடியா:
டெல்லி அரசாங்கத்தின் பின்னூட்டப் பிரிவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு டெல்லி அரசின் பின்னூட்டப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் சட்ட விரோத செயல்பாட்டின் காரணமாக அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகத சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ தரப்பு, "பின்னூட்டப் பிரிவை சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கி இயக்கியதால் அரசாங்க கருவூலத்திற்கு தோராயமாக ₹ 36 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
பொய் வழக்குகளா?
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி அளித்துள்ள டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், "மணீஷ் மீது பல பொய் வழக்குகளைப் போட்டு அவரை நீண்ட காலம் காவலில் வைப்பது பிரதமரின் திட்டம். நாட்டுக்கு சோகம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிசோடியா மீது வழக்குத் தொடர மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அனுமதி அளித்தது. சிசோடியா பின்னூட்ட பிரிவை அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாகப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
சிசோடியாவுக்கு எதிராக வழக்குத் தொடர பாஜக கோரிக்கை விடுத்த நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகளை "அரசியல் உள்நோக்கம்" கொண்டவை என மறுத்து வருகிறார்.
டெல்லி மதுபானக் கொள்கை:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.
அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.
துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.