பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் என்ற இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஃபெரோஸ்பூருக்கு செல்லும் வழியில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பிரதமர் பங்கேற்பதில் சிக்கல் இருந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்வதிலும் சிக்கல் இருந்துள்ளது. இதனால் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை உறுதி செய்து பிரதமர் வருகை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை பதிண்டா நகருக்கு வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் வழியாக ஹூசயின்வாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல இருந்தார். மழை காரணமாக மோசமான வானிலை நிலவி வந்ததால், ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்கமாக ஹூசயின்வாலா செல்ல இருந்தார். பஞ்சாப் காவல்துறையினரிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உறுதி செய்யப்பட்டு பிரதமர் இருந்த வாகனம் சாலை வழியாக புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஹூசயின்வாலாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், சிலர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், கிட்டத்தட்ட 15-20 நிமிடங்களுக்கு பிரதமர் இருந்த கான்வாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமரின் பயணம் தொடர்ந்து மேற்கொள்ளாமல் முடித்து கொள்ளப்பட்டது. இதனால், அங்கிருந்து பதிண்டா நகருக்கு பிரதமரின் கான்வாய் திரும்பியுள்ளது. எனவே, பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்