கடந்த ஓரிரு தினங்களில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது புல்லிபாய் செயலி வழக்கு. புத்தாண்டு தினமான கடந்த 1-ந் தேதி புல்லி பாய் எனும் செயலில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லீம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததுடன் அவர்களை ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.





ராகுல் காந்தி, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்ட்ரா மாநிலங்களின் பல பகுதிகளிலும் புல்லி பாய் செயலி மீதும், அதன் நிறுவனர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணியில் இருந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவரை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவரிடம் மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.


விசாரணையில், இந்துத்வ ஆதரவாளரான விஷால் ஜா தன்னுடன் அரசியல் ரீதியாக முரண்பாடு கொண்ட பெண் ஆளுமைகளை பழிவாங்குவதற்காகவே அவர்களை ஏலம் விடுவதாக ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண் ஒருவரும்,  மற்றொரு மாணவரும் இந்த செயலி தொடங்குவதில் துணையாக இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம்சிங் நகரைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண், அதே உத்தரகாண்டைச் சேர்ந்த 21 வயது மாணவர் மயங்க் ராவல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.





சில வருடங்களுக்கு முன்பே, பெற்றோர்களை இழந்த அந்த இளம்பெண் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுத தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இளம்பெண்ணுக்கு நேபாளத்தில் உள்ள அவரது நண்பர் க்யூ அளிக்கும் அறிவுரையின்படியே இந்த செயல்களை எல்லாம் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் உள்ள மற்றொரு மாஸ்டர் மைண்டான க்யூவை தேடும் பணியில் தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


முன்னதாக, இந்த செயலியில் பெரும்பாலும் இஸ்லாமிய பெண்களே ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியலமைப்புப்படி ஆட்சி நடைபெறும் இந்தியாவில் இதுபோன்று பெண்களை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியானதும் பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண